Chennai Crocodile Park: ஹோட்டல்கள் பற்றி புகார் வருவது சாதாரணமான ஒன்று. ஆனால் சென்னையில் இருக்கும் பிரபல ஹோட்டல் மீது விலங்கு நல ஆர்வலர்கள் அதீத கோபத்தில் உள்ளனர்.
காரணம், அந்த ஹோட்டலில் ஒலித்த சத்தமான இசையால், ஒரு பெண் முதலை உயிரிழந்திருக்கிறது.
ஆம்! சென்னை மகாபலிபுரம் சாலையில், குரோக்கடைல் பேங்கிற்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது ஷெரட்டான் 5 நட்சத்திர ஹோட்டல்.
இந்த குரோக்கோடைல் பேங்கில் 2000 முதலைகள் இருக்கின்றன. இவற்றில் அழிந்துவரும் க்யூபன் முதலை இனங்களில் 4 பெண்களும், ஒரு ஆண் முதலையும் உள்ளன.
ஷெரட்டான் ஹோட்டலின் சுவர், இந்த முதலைகள் இருக்கும் இடத்தில் இருந்து 15 மீட்டர் தொலைவில் தான் உள்ளது. ஹோட்டலின் அந்த சுவரில் தான் ஸ்பீக்கர்கள் பொருத்தப் பட்டிருக்கின்றன.
கடந்த செவ்வாய் அன்று, இங்கு ஒலித்த அதி சத்தமான இசையால் ஒரு பெண் முதலை இறந்திருப்பதாகக் கூறுகிறார், குரோக்கடைல் பார்க்கின் நிறுவனர் ரோம் விட்டேக்கர்.
மெட்ராஸ் குரோக்கடைல் பார்க்கின் முகநூல் பக்கத்தில், விட்டேக்கர் எழுதிய பதிவில், “அழிந்து வரும் க்யூபன் இனத்தின் பெண் முதலை ஒன்று கடந்த மார்ச் 30-ம் தேதி இறந்து விட்டது. ஷெரட்டான் ஹோட்டலின் புல்வெளியில் படு பயங்கரமான ஒலி அளவில் இசை ஒலித்தது. ஒலி அளவைக் குறைக்க சொல்லி பலமுறை கோரிக்கை வைத்தும், அவர்கள் செவி சாய்க்கவில்லை. இந்த அதிர்வினால் குரோக்கடைல் பார்க்கின் அந்தப் பகுதியில் இருந்த க்யூபன் இன பெண் முதலைக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
ஹோட்டலுக்கும் க்யூபன் இன முதலைகள் இருந்த இடத்திற்கும் வெறும் 15 மீட்டர் தொலைவு தான். ஹோட்டலின் அந்த சுவரில் தான் பெரிய பெரிய ஸ்பீக்கர்களை வைத்திருக்கிறார்கள்.
சற்று நேரம் முன்புதான் அதற்கு உணவு கொடுக்கப்பட்டது. உடம்பில் காயங்களோ, உடல்நலக் குறைவோ இல்லாமல், மிகவும் ஆரோக்கியமாக இருந்தது அந்த முதலை.
க்யூபன் இனமான இவைகளில் 1 ஆண், 4 பெண் (இப்போது 3) என மொத்தம் 5 முதலைகள் இருந்தன. இவை உலகிலேயே ஆபத்துள்ள விலங்குகளில் முக்கியமானதும், அழிந்து வரும் இனத்தைச் சேர்ந்ததும் ஆகும். ஆனால் நல்ல வேளை அந்த ஆண் முதலைக்கு எதுவும் ஆகவில்லை. இப்போது மீதமுள்ள 4 முதலைகளை காப்பாற்ற, நாங்கள் அவற்றை வேறு இடத்திற்கு மாற்றுகிறோம். இது மிகவும் விலையுயர்ந்த மற்றும் கடினமான பராமரிப்பு.
குரோக்கடைல் பேங்கின் நிறுவனர்களில் ஒருவரான நான், இந்த முதலையின் இழப்பால் மிகவும் நொந்து போயுள்ளேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Herpetologist Rom Whitaker
இதைத் தொடர்ந்து நாம் அவரை தொடர்பு கொண்டு மேலும் விபரங்களைக் கேட்டோம், “அந்த ஹோட்டலில் ஒலிக்கும் இசை நில நடுக்கம் வரும் அளவுக்கு அத்தனை அதிர்வாக உள்ளது. மனிதர்களாகிய நம்மாலேயே அவற்றை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இங்கு இருக்கும் முதலைகள் அழிந்து வரும் இனங்களைச் சேர்ந்த வெளிநாட்டு முதலைகள். என்னை நம்பித்தான் வெளிநாட்டிலிருந்து அவற்றைக் கொடுக்கிறார்கள்.
இப்படி அவைகள் இறக்கும் போது, அவர்களிடம் போய் சத்தமான இசை தான் காரணம் என்பதை நான் எப்படி சொல்வேன், அப்படியே சொன்னாலும், அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இனியாவது ஹோட்டல் நிர்வாகத்தினர், தங்களைச் சுற்றியிருக்கும் உயிர்களையும் மதிக்க வேண்டும்” என்றார்.
முதலையின் இந்த துயர சம்பவத்தைக் கேட்டு, விலங்கு நல ஆர்வலர்கள் மிகுந்த வருத்தத்திலும், கோபத்திலும் உள்ளனர்.