Aiadmk | Lok Sabha Election | தி.மு.க முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனின் மருமகளும், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சிம்லா முத்துச்சோழன் அக்கட்சியில் இணைந்தார். இது குறித்து பேசிய சிம்லா முத்துச்சோழன், "ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்குப் பிறகு எனக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
ஆனால் அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. நான் பலமுறை அவருக்கு நியாபகப்படுத்த முயன்றும் பலன் இல்லை. மேலும் கடந்த கால கருணாநிதி திமுகவாக இது இல்லை.
நான் திமுகவில் இருந்த நிலையில் எந்த வளர்ச்சியும் இல்லை. கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கும் தடை விதித்தார்கள்” என்றார்.
திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் இரண்டாவது மருமகள் சிம்லா முத்துச்சோழன் ஆவார்.
இவர், கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். ஆர்.சி. கிறிஸ்தவரான இவர், ஜெயலலிதா படித்த அதே பள்ளியில் படித்தவர் ஆவார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தார்.
ஆனால் திமுக மருது கணேஷிக்கு வாய்ப்பு அளித்தது. அவர் டி.டி.வி தினகரனிடம் டெபாசிட் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“