பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யக் கோரி அவருடைய சகோதரி தொடர்ந்த வழக்கில், சிறைத்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லியில் கைது செய்தனர்.
சிவசங்கர் பாபா மீது 7 போக்சோ வழக்குகள், பாலியல் வன்கொடுமை வழக்கு என மொத்தம் 8 வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா தற்போது புழல் சிறையில் உள்ளார்.
இந்நிலையில், சிவசங்கர் பாபாவின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை கோரியும், சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கக் கோரியும் சிவசங்கர் பாபாவின் சகோதரி ஜெயலட்சுமி கணபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
சிவசங்கர் பாபாவின் சகோதரி ஜெயலட்சுமி கணபதி தாக்கல் செய்த மனுவில், தனது சகோதரர் சிவசங்கர் பாபா நீரிழிவு, பக்கவாதம், இதயநோய் உள்ளிட்டவற்றால் அவதிப்படுகிறார். அதனால், அவருக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தற்போது சிவசங்கர் பாபாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு அரசு சிறை மருத்துவமனையில் இல்லாத சிறப்பு சிகிச்சை தேவை என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது சகோதரர் சிவசங்கர் பாபாவின் தற்போதைய உடல்நிலை குறித்து தனக்கு மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யக் கோரியும் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள சொந்த செலவில் சிகிச்சை அனுமதிக்க கோரியும் சிபிசிஐடி போலீசாரிடமும் புழல் சிறை நிர்வாகத்திடமும் கடந்த மாதம் 23ம் தேதி ம்னு அளித்தும் அவர்கள் அதை கருத்தில் கொள்ளவில்லை. அதனால், தனது சகோதரரின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, இந்த வழக்கு குறித்து காவல்துறையும், சிறைத்துறையும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.