சென்னை கோயம்பேடு சந்தை தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களும், வியாபாரிகளும் காய்கறி வாங்கிச் செல்லும் முக்கிய விற்பனைத் தளமாக திகழ்கிறது. குறைவான விலையில் தரமான காய்கறிகளை வாங்கிச் செல்லலாம் என இங்கு மக்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் நூற்றுக்கணக்கான கிலோவில் தினந்தோறும் கோயம்பேட்டில் அழுகிய நிலையில் கொட்டப்படும் காய்கறிகளை சிலர் எடுத்துச் சென்று கழுவி, அதனை விற்பனை செய்கின்றனர்.
இனிமேல் வியாபாரம் செய்ய இயலாது என கொட்டப்படும் அந்த காய்கறிகளை உண்மை அறியாமல் சில நடுத்தர வர்க்கத்தினரும், உண்மையை அறிந்தே பல உணவக உரிமையாளர்களும் வாங்கிச் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோர உணவகங்கள், கடை பிடித்து உணவங்கள் நடத்துபவர்கள், இந்த அழுகிய காய்கறி விற்பனையின் பிரதான வாடிக்கையாளர்களாக உள்ளனர். குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்கினால்தான் லாபம் கட்டுபடியாகும் என்ற நோக்கத்தில் அவர்கள் இப்படி செய்வதால், விவரம் அறியாமல் அவர்கள் விற்கும் உணவுகளை சாப்பிடும் சாமானியர்கள் பல்வேறு உபாதைகளுக்கும், உடல்நலக்குறைவுகளுக்கும் ஆளாகின்றனர்.
அதேசமயம், இப்படி அழுகிய காய்கறிகளை விற்பனை மோசடிக்கும்பலோ, தில்லுமுள்ளு மாஃபியோ கிடையாது. அவர்கள் அனைவரும் அடுத்த வேளை சாப்பிட்டிற்கே திண்டாடும் அடித்தட்டு மக்களும், முதியவர்களும்தான். உரிய வாழ்வாதரம் இல்லாத காரணத்தாலும், காய்கறிகளை வாங்கி விற்பனை செய்ய முடியாத நிலையிலும் இருப்பதால்தான் இப்படி மோசமான செயலில் ஈடுபடுவதாக கோயம்பேடு சந்தையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு உரிய வாழ்வாதாரம் கிடைக்கும் வகையில் கோயம்பேடு வணிக வளாக நிர்வாகமோ அல்லது அரசு செய்து கொடுத்தால் அவர்கள் கட்டாயம் உழைத்து வாழ்வார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“