/indian-express-tamil/media/media_files/2025/05/11/TPQxZc2fHBqMlggvNx0v.jpeg)
Puducherry
புதுச்சேரியில் தயாரிக்கப்படும் போலி மதுபானங்கள், தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் புதுச்சேரியில் போலியாக தயாரிக்கப்பட்டு தமிழக திமுக ஆட்சியாளர்கள் துணையோடு டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு புதுச்சேரியில் தயாரிக்கப்படும் போலி மதுபானங்கள் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், சிதம்பரம், மரக்காணம், திண்டிவனம் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட தமிழக மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த மதுபானங்கள் புதுச்சேரியில் போலி மதுபானம் தயாரிக்கப்பட்டு தினசரி பல கனரக வாகனங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மதுபானங்கள் புதுச்சேரியில் இருந்து கடத்தப்படுகிறது. புதுச்சேரியை தங்களது மதுபான உற்பத்தி கேந்திரமாக பயன்படுத்திக் கொண்டு தங்கு தடை இல்லாமல் தமிழகத்துக்கு கடத்தப்படுகிறது.
இதனால் டாஸ்மாக் மூலமாக வர வேண்டிய வருமானம் குறுக்கு வழியில் திமுகவை சேர்ந்தவர்களுக்கு செல்கிறது. அதே போன்று போலி மதுபானத்தால் புதுச்சேரிக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து கனரக வாகனத்தில் கடத்தப்பட்ட போலி மதுபானங்கள் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை என்ற இடத்தில் தமிழக கலால் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது சம்பந்தமான தொடர் விசாரணையில் புதுச்சேரி வில்லியனூர் அடுத்த உளவாய்க்கால் பகுதியில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் பல மாதங்களாக போலி மதுபான தொழிற்சாலை நடைபெற்று வருவது தமிழக காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இடத்தில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் அளவிற்கு போலி மதுபான உற்பத்தி செய்யப்பட்டு தமிழக பகுதிக்கு தினசரி கொண்டு செல்லப்படுகிறது. வேளாண்துறை அமைச்சரின் குடும்பத்திற்கு சொந்தமான இந்த இடத்தில் கடந்த ஆண்டு போலி சந்தன ஆயில் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அதே இடத்தில் போலி மதுபான தொழிற்சாலை செயல்பட்டு வந்திருக்கிறது.
ஒரு அமைச்சரின் குடும்பத்திற்கு சொந்தமான இடம் என்பதால் அங்கு தயாரிக்கப்படுகின்ற போலி மதுபான தொழிற்சாலைகள் உள்ளூரில் உள்ள காவல்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் கண்காணிக்காமல் விட்டுவிடுகின்றனர். இதனால் அண்டை மாநிலத்தில் இருந்து கலால்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் புதுச்சேரிக்கு வருகை தந்து உரிய நடவடிக்கை எடுக்கின்றனர். இது புதுச்சேரி மாநிலத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் செயலாகும்.
இந்த பிரச்சனையில் போலி மதுபானம் தயாரிப்பை கண்டும் காணாமல் விட்ட உள்ளூர் காவல்நிலை அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களையும் பணியிடமாற்றம் செய்ய வேண்டும். தினசரி சிறிய, பெரிய மற்றும் கனரக வாகனத்தின் மூலம் கடத்தப்படும் போலி மதுபானங்களை நம் மாநில கலால்துறையினர் விழிப்போடு இருக்க வேண்டும்.
பல்வேறு சட்டவிரோத குற்றசாட்டுகளில் அமைச்சரின் குடும்பத்தினர் அடிக்கடி செய்திகளாக வருவதால் ஆளும் அரசுக்கு அழகல்ல. இதன் மீது முதலமைச்சர் உரிய அறிவுரையை சம்பந்தபட்ட அமைச்சருக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில துணைச் செயலாளர்கள் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.