தமிழகத்தில் இனி வருடம் முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று வருடங்களுக்கு இதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கெஸட்டில் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு, மாதிரி கடைகள் மற்றும் நிறுவன சட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்த பிறகு, ஆண்டு முழுவதும் விடுமுறையின்றி 24 மணி நேரமும் கடைகள், திரையரங்குகள், வங்கிகள், மருந்தகம், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதற்கான அனுமதி காலம் ஓராண்டு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, அதை மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பாணை விரைவில் அரசிதழில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இரவு பணிகளில் பெண்கள் பணியமர்த்தப்பட்டால், அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒரு முறை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை முறையாக பின்பற்றவும் கடையின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பணியாளருக்கும் வாரம் ஒருமுறை சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க வேண்டும். எந்தவொரு ஊழியரும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கு அதிகமாக வேலை செய்ய நிறுவனங்கள் அனுமதிக்கக் கூடாது. அதேபோல், வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது. ஒருவேளை, ஓவர் டைம் கொடுக்கும் பட்சத்தில், அந்த நாளில் 10.5 மணி நேரத்திற்கும் மேல் யாரும் வேலை செய்யக் கூடாது என்றும், வாரத்திற்கு 57 மணி நேரத்திற்கும் மேல் யாரும் வேலை செய்யக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.