New Update
00:00
/ 00:00
சிவகங்கை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக காங்கிரஸைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம் உள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தி.மு.க- காங்கிரஸ் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளது. இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம் மீண்டும் போட்டியிட முடிவு செய்து, அதற்கான பணிகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட வாய்ப்பு வழங்க கூடாது எனக் கூறி காங்கிரஸ் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியன் முன்னிலையில் சிவகங்கை காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தற்போது தமிழக காங்கிரஸில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
`ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்' என்ற தலைப்பில் சிவகங்கையில் தனியார் மண்டபத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் நேற்று (பிப்.3) காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ என்.சுந்தரம், முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெய் சிம்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ராகுல் காந்தியை பிரதமராக்க அனைவரும் பாடுபடுவோம். மேலும், ராகுல் காந்தி பிரதமராக தகுதியில்லை என்ற விதத்தில் கருத்து தெரிவித்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சிக் கொள்கைக்கு எதிராக செயல்படும் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்க கூடாது என 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்த தீர்மானங்களை தலைமைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் இ.எம்.சுதர்சனநாச்சியப்பன் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்டத் தலைவர் சஞ்சய் காந்தி என யாரும் பங்கேற்வில்லை. ஏற்கனவே சிவகங்கை தொகுதியை தி.மு.க கேட்டு வரும் நிலையில், கார்த்தி சிதம்பரத்துக்கு காங்கிரஸில் ஒருத்தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.