டாக்டர் கிருஷ்ணசாமி தெரியும்... ஷ்யாம் கிருஷ்ணசாமி? வேட்பாளராகும் புதிய வாரிசு

டாக்டர் கிருஷ்ணசாமியை அனைவருக்கும் தெரியும். ஷ்யாம் கிருஷ்ணசாமியை தெரியுமா? அவர்தான் புதிய தமிழகம் கட்சியின் ஓட்டப்பிடாரம் வேட்பாளராம்!

டாக்டர் கிருஷ்ணசாமியை அனைவருக்கும் தெரியும். ஷ்யாம் கிருஷ்ணசாமியை தெரியுமா? அவர்தான் புதிய தமிழகம் கட்சியின் ஓட்டப்பிடாரம் வேட்பாளராம்!

தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பால் இடைத்தேர்தலை சந்திக்கவுள்ள 20 தொகுதிகளில் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரமும் ஒன்று. 2016 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி அங்கம் வகித்தது. ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சுந்தராஜ்ஜிடம் வெறும் 493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தார்.
இம்முறை அ.தி.மு.க. நோக்கி நகர்ந்துள்ள புதிய தமிழகம் கட்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகிறது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தூதுவர்களுடன் கோயம்புத்தூரில் டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இடைத்தேர்தலை சந்திக்கவுள்ள 20 தொகுதிகளில், ஒன்றை கிருஷ்ணசாமிக்கு ஒதுக்கிவிட்டு, மற்றவற்றில் அவரை பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அ.தி.மு.க. தலைமை கருதுகிறது.

அ.தி.மு.க. கூட்டணி முடிவானவுடன், ஒட்டப்பிடாரம் தொகுதியில் தனது மகன் டாக்டர் ஷியாமை வேட்பாளராக களமிறக்க கிருஷ்ணசாமி முடிவெடுத்துள்ளாராம். ஒட்டப்பிடாரம் தொகுதியில் 1996 மற்றும் 2011 தேர்தல்களில் டாக்டர் கிருஷ்ணசாமி இருமுறை வெற்றி பெற்றுள்ளதால், தனது வாரிசாக மகன் ஷியாமை களமிறக்க ஒட்டப்பிடாரம் தான் சரியான தேர்வு என கருதுகிறாராம்.

சமூக வலைதளங்கள் மூலமாக தமிழக இளைஞர்களிடம் நன்கு அறிமுகமான ஷியாம், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணியை கவனித்து வருகிறார். இச்செய்தி வெளியே கசிய தொடங்கியவுடன், தேர்தல் களப்பணிகளில் புதிய தமிழகம் கட்சியினர் இப்போதே இறங்கிவிட்டனர்.

டாக்டர் கிருஷ்ணசாமியின் குறி பாராளுமன்றத் தேர்தல் தான் என்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம். பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனும் தென்காசி தொகுதிக்கு குறிவைத்துள்ளதால், இப்போதே அத்தொகுதி தகிக்க ஆரம்பித்துவிட்டது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close