scorecardresearch

சர்ச்சை கருத்துகள் வெளியிட்ட மருத்துவர் ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ்

குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும் என்று சொன்னது ஒரு ஃபுளோவில் வந்த வார்த்தைதான்… அது தப்புதான் என ஷர்மிகா வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கோரியிருந்தார்.

Dr Sharmika
Dr Sharmika

மருத்துவத்திற்கு எதிரான கருத்துகள் வெளியிட்ட சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் இந்திய மருத்துவ இயக்குனரகம் 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது மருத்துவ குறிப்புகள் மூலம் குறுகிய காலத்தில் பிரபலமானவர் சித்த மருத்துவர் ஷர்மிகா. இவர் மருத்துவரும், பாஜகவில் மாநில சிறுபான்மை பிரிவு தலைவரான டெய்சியின் மகள்.

ஷர்மிகா பிரபலமானதை அடுத்து பல யூடியூப் சேனல்களில் தொடர்ந்து பேட்டியளித்து வந்தார். ஒருமுறை பாடகி சின்மயி கூட, ஷர்மிகா தவறான கருத்துகளை பரப்புவதாக கூறி வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில் ஷர்மிகா தனது சமீபத்திய பேட்டிகளில், மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது குலோப்ஜாமூன் சாப்பிட்டால் ஒரே நாளில் 3 கிலோ எடை கூடும், நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும், குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், கடவுள் மனசு வைத்தால் தான் குழந்தை பிறக்கும் என்றெல்லாம் கூறிய கருத்துகள்  சர்ச்சையானது.

ஷர்மிகா அறிவியலுக்கு புறம்பாக, மருத்துவத்துக்கு எதிராக பேசுவதாக அவர்மீது விமர்சனங்கள் எழுந்தது.

இதைத் தொடர்ந்து மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராகத் தவறான கருத்துகளைப் பேசும் ஷர்மிகா குறித்து, யாராவது புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற, தவறான தகவல்களை நம்பி சுய மருத்துவம் செய்துகொள்வது கூடாது என தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குனர் மருத்துவர் பார்த்திபன் கூறியிருந்தார்.

இந்நிலையில் குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும் என்று சொன்னது ஒரு ஃபுளோவில் வந்த வார்த்தைதான்… அது தப்புதான் என ஷர்மிகா வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கோரியிருந்தார்.

இருப்பினும் இதுதொடர்பாக புகார்கள் வந்த நிலையில், சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் 15 நாட்களுக்குள் இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் மருத்துவர் ஷர்மிகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Siddha doctor sharmika controversial daisy saran indian medical council

Best of Express