By: WebDesk
Updated: October 10, 2017, 03:31:12 PM
டெங்கு காய்ச்சல் வருமுன் நம்மை காப்பது எப்படி? டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து இருக்கிறதா? என விளக்குகிறார் சித்த மருத்துவர் வீரபாபு.
டெங்கு காய்ச்சல், தமிழகம் மற்றும் புதுவையில் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையையும், அதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையையும் கேட்டால், மனம் பதறுகிறது.
டெங்குவைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது. கொசு தேங்கும் பகுதிகளில் அதிகாரிகள் பார்வையிட்டு, அப்புறப்படுத்தி வருகின்றனர். கொசு தேங்குவதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
டெங்குவைக் கட்டுப்படுத்த நம்முடைய ஆதி மருத்துவமான சித்த மருத்துவத்தில் என்னென்ன வழிமுறைகள் உள்ளன? அதுகுறித்து விளக்குகிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவர் வீரபாபு.
சித்த மருத்துவர் வீரபாபு
“டெங்கு வந்தபின்பு பாதுகாப்பதைவிட, அது வருமுன் காப்பதே எப்போதுமே சிறந்தது. பொதுவாகவே எந்த நோய்க்கும் இது முக்கியம். டெங்குவுக்கு எல்லோருமே நிலவேம்பு கஷாயம் பருகுவது அவசியம். குழந்தைகளுக்கு 10 முதல் 20 மி.லி.யும், பெரியவர்கள் 50 முதல் 60 மி.லி.யும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டும். 5 நாட்கள் இவ்வாறு தொடர்ந்து குடித்தபிறகு, ஒரு வாரம் இடைவெளி விடலாம். மறுபடியும் 5 நாட்களுக்கு தொடர்ந்து மேற்கண்டவாறு குடிக்க வேண்டும். மழைக்காலம் முடியும்வரை இவ்வாறு தொடர்ந்து குடித்துவர வேண்டும்.
ஆடாதொடா இலைப்பொடியை வாங்கி, தேனில் நன்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை, காலை மற்றும் இரவில் குழந்தைகளுக்கு அரை ஸ்பூனும், பெரியவர்களுக்கு ஒரு ஸ்பூனும் கொடுத்து வரவேண்டும். மழைக்காலம் முழுவதும் தினமும் இதை சாப்பிட்டு வந்தால், டெங்கு வந்தால் கூட இரத்தத் தட்டணுக்கள் குறைவது மிக மெதுவாகவே நடக்கும். எனவே, ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். இவை இரண்டும்தான் வரும்முன் காக்க சித்த மருத்துவத்தில் உள்ள வழிகள். இவை இரண்டையுமே சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்” என்கிறார் சித்த மருத்துவர் வீரபாபு.
டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து இருக்கிறதா?
“பப்பாளி இலைச்சாறை தினமும் மூன்று வேளை குடித்துவர வேண்டும். குழந்தைகளுக்கு 5 மி.லி.யும், பெரியவர்களுக்கு 15 மி.லி.யும் கொடுக்கலாம். இதனுடன் சேர்த்து நிலவேம்பு கஷாயத்தையும், தேனில் கலந்த ஆடாதொடை இலைப்பொடியையும் எடுத்துக் கொள்வது அவசியம். மிக முக்கியமாக, அலோபதி மருந்துகளையும் எடுக்க வேண்டும்” என்கிறார் சித்த மருத்துவர் வீரபாபு.