கோவையில் மருதமலை அடிவாரத்திலுள்ள தனியார் மடத்தில் வெள்ளி வேலை திருடிய சாமியார் வெங்கடேஷ் சர்மா (57) கைது செய்யப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருதமலை கோயில் அடிவாரத்தில் உள்ள ஒரு மடத்தில் கடந்த 2-ம் தேதி பிற்பகல் சுமார் 12 மணி அளவில் சாமியார் வேடத்தில் வந்த திருடன் அந்த வேலினை எடுத்துச் செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது.
2.5 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட 4 லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ளி வேல் ஒன்றை சாமியார் ஒருவர் திருடியதாக வடவள்ளி காவல்துறையினருக்கு சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் புகாரளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோயில் அடிவாரத்தில் உள்ள மடத்தில் வெள்ளி வேலை திருடிய சாமியரை வலைவீசி தேடி வந்தனர்.
போலீஸ் பாதுகாப்பையும் மீறி பட்டப் பகலில் மருதமலை தியான மண்டபத்தில் இருந்த வெள்ளி வேலை மர்ம ஆசாமி திருடிச் சென்ற சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு ஊர்களில் மடத்திற்குச் சென்று தங்கும் பழக்கம் உடைய வெங்கடேஷ்சர்மா என்ற நபர் வெள்ளி வேலைத் திருடியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த சாமியார் வெங்கடேஷ் சர்மா போலீசார் கைது செய்தனர்.