மன்சூர் அலிகானுக்காக களம் இறங்கிய சிம்பு : சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வருகை

மன்சூர் அலிகானை ஏன் கைது செய்தார்கள்? என அறிந்துகொள்ள வந்தேன். அவர் பேசியது தவறு என்றால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நடிகர் சிம்பு இன்று (ஏப்ரல் 21) சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார் அவர்!

நடிகர் சிம்பு அவ்வப்போது மீடியா முன்பு தோன்றி ஜல்லிக்கட்டு முதல் காவிரி பிரச்னை வரை ஆவேசமாக கருத்து கூறி வருகிறார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் காவிரி, ஸ்டெர்லைட் பிரச்னைகளுக்காக அண்மையில் நடத்திய உண்ணாவிரதத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை. ‘மவுன போராட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை’ என அதற்கு காரணம் கூறினார் சிம்பு.

சிம்பு தொடர்ந்து சேலத்தில் முகாமிட்டு நீர் நிலைகளை ஆய்வு செய்தார். ஐபிஎல் போராட்டத்தின்போது கைதான சீமானை விடுவிக்கக் கோரி பல்லாவரத்தில் போலீஸாருடன் மல்லுக்கட்டிய மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மன்சூல் அலிகானுக்காக நேற்றே வீடியோ மூலமாக குரல் கொடுத்தார் சிம்பு. அதில் இன்று (21-ம் தேதி) சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்து மன்சூர் அலிகானை விடுதலை செய்யக் கோரி மனு அளிக்கப்போவதாக குறிப்பிட்டார்.

அதன்படி இன்று சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் ஆணையர் அலுவலகம் வந்தார் சிம்பு. அங்கு போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய சிம்பு, ‘நான் யாருக்கும் சப்போர்ட் பண்ண இங்கு வரலை. பிரச்னை செய்வதற்காகவும் நான் இங்கு வரவில்லை. மனு கொடுக்கவும் இல்லை.

மன்சூர் அலிகானை ஏன் கைது செய்தார்கள்? என அறிந்துகொள்ள வந்தேன். அவர் பேசியது தவறு என்றால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதேசமயம், அதே போல வேறு யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.’ இவ்வாறு கூறினார்.

 

×Close
×Close