திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு அதிகளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்சியிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு பயணிகள் பெரும் அவதியைச் சந்தித்தனர். இதேபோன்று கோலாலம்பூர் புறப்பட்டுச் செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பயணிகள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணிக்கு திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு 164 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 164 பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டுக் காத்திருப்போர் அறையில் அமர வைக்கப்பட்டனர்.
திருச்சி மற்றும் சென்னையில் இருந்து வந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் விமான கோளாற்றைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் கோளாறு சரிசெய்ய முடியாமல் தாமதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் விமான நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று பிற்பகல் மாற்று விமானம் மூலம் அந்த பயணிகள் சிங்கப்பூர் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்