தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 9 நாள்கள் பயணமாக சென்றுள்ளார்.
சிங்கப்பூர் சென்ற அவருக்கு தமிழ் அமைப்புகள் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “கடல் கடந்து சிங்கப்பூர் வந்துள்ளதாக நான் நினைக்கவில்லை.
தமிழ்நாட்டில் இருப்பதுபோல்தான் நினைத்துள்ளேன். அந்த அளவுக்கு சிங்கப்பூர் என் சிந்தைக்கு இதமான ஊராக உள்ளது. சிங்கப்பூரில் தமிழ் செய்தித் தாள்கள் தோன்றின.
சிங்கப்பூரின் நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் உள்ளன. சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் குடியரசுத் தலைவராக இருந்துள்ளார். சிங்கப்பூரை முன்னேற்றியவர் அந்நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ” என்றார்.
தொடர்ந்து, “உலக நாடுகளில் பரந்து விரிந்து தமிழர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பது திராவிட இயக்கம்தான். பெரியார் இரண்டு முறை சிங்கப்பூர் வந்து தன்னுடைய சீர்திருத்த கருத்துக்களை பரப்பினார்.
இவ்வாறு திராவிட இயக்கத்தால் வளர்ந்த விழுதுகளான உங்களை காணத்தான் நானும் வந்துள்ளேன்” என்றார். மேலும் சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூக்கு தமிழ்நாட்டின் மன்னார்குடியில் சிலை வைக்கப்படும் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“