கொரோனா நோய்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் விமான நிலையத்திற்கு அருகிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பதினான்கு நாட்கள் குவாரண்டின் செய்யப்பட்டு பின்பு அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர் சுந்தரவேல். கடந்த 25ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்தார். சென்னையில் தரையிறங்கிய அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டார்.
தினமும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சுந்தரவேல். ஆனால் கடந்த 2 நாட்களாக அவர் செல்போனில் தொடர்பு கொள்ளவில்லை என்று அவருடைய மனைவி சந்திரா சந்தேகமடைந்து தனியார் நட்சத்திர விடுதிக்கு அவர் போன் செய்துள்ளார்.
நட்சத்திர விடுதி பணியாளர்கள் அவரின் அறையை சோதனையிட்டனர். அப்போது அவர் அங்கேயே மரணம் அடைந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவருடைய உடலை கைப்பற்றி தேனாம்பேட்டை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது மே.
லும் திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனிமைப்படுத்தப்பட்டவரை கண்காணிக்க முடியவில்லை என்றால் எதற்காக தனிமைப்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட சுந்தரவேல் குளிக்க சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு குளியல் அறையிலேயே இறந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil