Chennai Tamil News: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக ரூபாய் 16.19 கோடி மற்றும் ரூபாய் 4.50 கோடி மதிப்பீட்டில் 42 பூங்காக்கள் மற்றும் 11 விளையாட்டு மைதானங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தங்களை பெருநகர சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது.
தற்போதுள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்தப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.
தற்போது சென்னை மாநகராட்சி 738 பூங்காக்களை பராமரிக்கிறது. கூடுதலாக, 220 விளையாட்டு மைதானங்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் 204 குழந்தைகள் விளையாடும் பகுதிகள் அந்தந்த இடங்களில் இருக்கும் குடிமை அமைப்புகளால் பராமரிக்கப்படுகின்றன.
புதிதாக கட்டப்படும் பூங்காக்களில் நடைபாதைகள், வெளிப்புற உடற்பயிற்சி உபகரணங்கள், சுவர்களில் வண்ணமயமான சுவரோவியங்கள், பாரம்பரிய மர இனங்கள் மற்றும் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் ஆகியவை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கைப்பந்து மற்றும் கூடைப்பந்து மைதானங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதவரத்தில் 26, 27, 30, 31 மற்றும் 32 ஆகிய வார்டுகளில் ரூபாய் 3.07 கோடி மதிப்பீட்டில் ஆறு புதிய பூங்காக்கள் அமைக்கப்படும். திருவொற்றியூர் வார்டு 3ல், சுனாமி குடியிருப்பு வளாகத்தில், 1.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஐந்து புதிய விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும். திட்டப்பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என்று கமிஷனர் நிபந்தனை விதித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil