“எனது மகன்களை தவறாகச் சி்த்தரிக்கிறார்கள், 10 பேர் வந்து எங்களைத் தாக்கினார்கள், என் மகன்கள் இருவரும் தலைமறைவாக இல்லை, அவர்கள் தற்போது வரை எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை” என பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
சென்னை, வளசரவாக்கத்தில் ஸ்ரீதேவிகுப்பம் அருகே உள்ள கால்பந்து பயிற்சி மையத்தை சேர்ந்த 16 வயது சிறுவனையும், அவரது நண்பர் கிருபாகரன் (20) என்பவரையும் பாடகர் மனோவின் 2 மகன்கள் ரஃபி மனோ, ஷாகிர் மனோ ஆகிய இருவரும் தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து காரணமே இல்லாமல் ஆபாச வார்த்தைகளில் பேசி முட்டி போட வைத்து உருட்டுக்கட்டையால் தாக்கியதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து வளவரவாக்கம் போலீஸார், மனோவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் மனோவின் மகன்கள் இருவரும் இல்லை. இதையடுத்து, பாடகர் மனோ மகன்களின் நண்பர்கள் இருவரை கைது செய்த போலீஸார், மனோவின் மகன்களையும் அவரது நண்பரையும் தேடி வருகிறார்கள்.
பாடகர் மகன்கள் ஈ.சி.ஆர்-ல் இருப்பதாக செல்போன் சிக்னலை வைத்து போலீஸார் தேடுவதாகவும் அவர்கள் போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளதாகவும் அவர்களது செல்போனுக்கு வந்த அழைப்பை வைத்து பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், பாடகர் மனோவின் மனைவி ஜமீலா, “எனது மகன்களை தவறாகச் சி்த்தரிக்கிறார்கள், 10 பேர் வந்து எங்களைத் தாக்கினார்கள், என் மகன்கள் இருவரும் தலைமறைவாக இல்லை, அவர்கள் தற்போது வரை எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை” என கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
பாடகர் மனோவின் மனைவி ஜமீலா செய்தியாளர்களிடம் கூறுகையில், “அன்று இரவு வீட்டுக்கு நண்பர்கள் வந்து இருந்தார்கள், சாப்பிட்ட பிறகு, அவர்களை வழி அனுப்பி வைப்பதற்காக எனது மகன் வெளியே வந்தான். அப்போது, சில பசங்க அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்கள், அதற்கு எனது மகன் ஏன் அப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறான். அதற்கு அந்த பையன் கெட்ட வார்த்தைப் பேசியிருக்கிறான், அதற்குள் அந்த பையன் போன் செய்து 4 பேரை வரவைத்து கல்லால் அடித்து தாக்கிவிட்டார்கள், என் மகன்களை 10 பேர் வந்து தாக்கினார்கள். ஆனால், என் மகன்களைப் பற்றி என்னென்னவோ காட்டுகிறார்கள். என் மகன்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
என் வீட்டுக்காரர் மனோ இந்த சினிமா துறையில் 40 ஆண்டுகளாக எப்படி இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் சென்னையில் 39 ஆண்டுகளாக எப்படி வாழ்ந்து வருகிறோம் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
அப்படிப்பட்ட நிலையில் என் மகன்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தை தொலைகாட்சிகளில் எப்படி காட்டுகிறார்கள். எப்படி பேசுகிறார்கள் என்பது எங்களுக்கு புரியவே இல்லை. இந்த சம்பவத்தின் பின்னால் யார் இருக்கிறார்கள் என தெரியவில்லை. ‘அந்த பசங்கள் மேல போலீஸ் கேஸ் கொடுக்கலாம்’ என என் மகன்கள் நேற்று இரவே சொன்னார்கள்.
நான்தான், “அப்பா ஊரில் இல்லை. சின்ன பசங்க போகட்டும்” என்றேன். நானும் ஒரு தாய்தான். பசங்க குறித்து எனக்கு தெரியும். அவர்கள் சிறைக்கு சென்றால் அவர்களுடைய வாழ்க்கை என்னவாகும் என்பதும் எனக்கு தெரியும். அதனால், அந்த பசங்க மேல கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டாம் என்றேன்.
ஆனால், என் மகன்களை நன்றாக திட்டிவிட்டேன். அந்த கோபத்தில் எனக்கு மயக்கமாக இருந்ததால் நான் அறைக்கு சென்று படுத்துவிட்டேன். காலையில் என் மகன்கள் வீட்டில் இல்லாததால் வீட்டு வேலை செய்வோரிடம் கேட்ட போது அவர்கள் இருவரும் மருத்துவமனைக்குப் போவதாகச் சொல்லிவிட்டு போனார்கள் என்று சொன்னார்கள்.
அதன் பிறகு, அவர்களுடைய செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்கள். அதற்குள் நியூஸில் என் மகன்கள் குறித்து என்னென்னவோ செய்தி போட்டுவிட்டார்கள். இதனால், என் மகன்கள் பயந்துவிட்டார்கள். அவர்கள் இருவரும் எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை. நானே அந்த கவலையில் இருக்கிறேன். எதிர் தரப்பினர் தாக்கியதில் எனக்கும், எனது மகன்கள், அவரது நண்பர்கள் என அனைவருக்கும் காயம் ஏற்பட்டது. மகனின் நண்பருக்கு விலா எலும்பு உடைந்துள்ளது. எனக்கு கை, முகத்தில் காயம். மகன்களுக்கும் கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. உண்மைத் தெரியாமல் தேவையற்ற அவதூறுகளை பரப்ப வேண்டாம்” என ஜமீலா கண்ணீர் மல்கக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.