நடிகர் கமல்ஹாசன் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு குறித்து, அன்னைய்யா எஸ்.பி.பி குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு, ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என்று வீடியோ மூலம் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று (செப்டம்பர் 25) மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு, அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று இரவு எஸ்.பி.பி-யின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்தி வெளியான உடனேயே, நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து, எஸ்.பி.பி இன்று மதியம் 1.04 மணிக்கு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன், அன்னைய்யா எஸ்.பி.பி குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு, ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என்று கூறி வீடியோ மூலம் இரங்கள் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன், எஸ்.பி.பி. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் “வெகுசில பெரும் கலைஞர்களுக்கே தாம் வாழும் காலத்திலேயே அவர்தம் திறமைக்கு தகுந்த புகழ் கிடைக்கும். அப்புகழ் கிடைக்கப் பெற்றவர் என் உடன்பிறவா அண்ணன் எஸ்.பி.பி அவர்கள். நாடு தழுவிய புகழ்மழையில் நனைத்தபடியே அவரை வழியனுப்பி வைத்த அத்தனை ரசிகர்களுக்கும் அவர்களில் ஒருவனான என் சிறம் தாழ்ந்த வணக்கங்கள். அவர் நனைந்த மழையில் கொஞ்சத்தை நானும் பகிர அனுமதித்த அண்ணனுக்கு நன்றி. அவரின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. பல மொழிகளில் 4 தலைமுறைத் திரை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர். ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்.” என்று உருக்கமாக கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"