மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் ஒற்றைக் காட்டு யானை உலா வந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் பகுதி அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் காட்டு யானை, மான், காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகின்றன.
அவ்வாறு ஊருக்குள் நுழையும் வனவிலங்குகள் பயிர்களை தொடர்ந்து சேதம் செய்கின்றன. இதனிடையே, கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்றிரவு (டிச 16) வனப்பகுதியில் இருந்து அகழியை தாண்டி வெளியேறிய ஒற்றை காட்டு யானை, லிங்காபுரம் இளங்கோவடிகள் வீதியை சுற்றியுள்ள பகுதிக்குள் நுழைந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், பொதுமக்களுடன் இணைந்து ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்றது. இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அகழியை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“