Advertisment

வீட்டிலேயே சுகப்பிரசவம்: சுகாதாரத்துறை மிரட்டல் எனப் புகார்.. விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை

சீர்காழி அருகே எருக்கூர் கிராமத்தில் வீட்டிலேயே சுகப்பிரசவம் பெற்றுக்கொண்ட தம்பதியை சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் மிரட்டுவதாகவும், அதனால் வீட்டை விட்டு வெளியே வசிப்பதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் வெளியானதையடுத்து, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
வீட்டிலேயே சுகப்பிரசவம்: சுகாதாரத்துறை மிரட்டல் எனப் புகார்.. விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை

சீர்காழி அருகே உள்ள எருக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜான் - பெல்சியா தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். அவர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தார். இதையடுத்து பெல்சியா 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். 2-வது குழந்தையை சுகப்பிரசவம் மூலம் பெற்றுக் கொள்ள பெல்சியா விரும்பினார். கணவர் ஜானும் அவருக்கு ஆதரவாக இருந்துள்ளார். சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெல்சியாவுக்கு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

Advertisment

வீட்டிலேயே குழந்தை பிறந்த தகவல் அறிந்த செவிலியர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள் போலீஸார் உதவியுடன் பெல்சியாவின் வீட்டிற்கு வந்து தாய்,குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வந்துள்ளனர். ஆனால், தாங்கள் நலமாக இருப்பதால் மருத்துவமனைக்கு வர மாட்டோம் என்று பெல்சியா - ஜான் தம்பதியினர் மறுத்து விட்டதாக தெரிகிறது. அப்போது திரும்பி சென்ற சுகாதாரத்துறையினர் மீண்டும் நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் வந்து மருத்துவ வாகனத்தில் ஏறி மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று பெல்சியாவை கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் மறுக்கவே ஜான் மற்றும் அவருடைய சகோதரியை போலீஸ் வாகனத்தில் ஏற்றி, தற்போது மருத்துவமனைக்கு வரவில்லை என்றால் எல்லோரையும் சிறையில் அடைத்துவிடுவதாக காவல்துறை, சுகாதாரத்துறை மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் அதற்கும் மறுத்து வீட்டிலேயே இருந்துள்ளனர்.

இதையடுத்து, தம்பதி காவல்துறை, சுகாதாரத்துறையினரின் இடையூரால் தாங்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாவும், தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என வாட்ஸ்அப் தகவல் அனுப்பி அக்கம்பக்கத்தினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களின் விருப்பத்தை மீறி கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று சுகாதாரத்துறை மற்றும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்பின், எது நடந்தாலும் நாங்களே பொறுப்பு என்று பெல்சியா - ஜான் தம்பதியிடம் எழுதி வாங்கிக் கொண்டு சுகாதாரத்துறை, போலீஸ் சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் தெரிந்த நபர்கள்
மூலமாக மீண்டும் வற்புறுத்துவதால் தம்பதி வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வசிப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில் மருத்துவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததாகவும் , அவதூறாக பேசியதாகவும், தங்களை மிரட்டியதாகவும் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொள்ளிடம் போலீஸார் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குப்பதிவு குறித்து தம்பதி சமூக வலைதளங்களில் வெளியிட்டதையடுத்து, சமூக ஆர்வலர்கள், அப்பகுதி மக்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

அந்தவகையில், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ. இளங்கீரன் கூறுகையில், "மயிலாடுதுறை சீர்காழி அருகேயுள்ள எருக்கூர் கிராமத்தை சேர்ந்த ஜான்-பெல்சியா தம்பதியினர் வீட்டிலேயே சுகப்பிரசவம் பெற்று கொண்டுள்ளனர். சுகாதாரத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களை நள்ளிரவில் சட்டத்திற்கு புறம்பாக காவல்துறையிரை கொண்டு அச்சுறுத்தி மருத்துவமனைக்கு வருமாறு மிரட்டியுள்ளது கண்டிக்கத்தக்கது.

பெல்சியாவை அவதூறாகவும், பயமுறுத்தும் வகையிலும் சுகாதாரத்துறையிர் பேசியுள்ளனர். இவர்களின் அச்சுறுத்தல் மற்றும் சர்ச்சைகளால் சுமார் 6 மணிநேரத்திற்கும் மேலாக கைக்குழந்தைக்கு பால் கொடுக்காத வண்ணம் தடுத்தும், பெல்சியாவின் கணவரை கைது செய்து விடுவோமெனவும் மிரட்டியுள்ளனர். ஒவ்வொரு தனிமனிதனும் தங்களுக்கான உரிமைகளை தாங்களே எடுத்துக்கொள்ளலாம். இப்படியிருக்க அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களின் உரிமைகளில் தலையிட்டு, அதிகார துஷ்பிரயோகம் செய்து, அந்த தம்பதியினரை மிரட்டிய சுகாதாரத்துறையினரையும் காவல்துறையினரையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

அதுமட்டுமில்லாமல், தம்பதி மீதும், அவர்களுக்கு உதவி செய்த சிலர் மீதும் போலியான புகார் ஒன்று கொள்ளிடம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதான வழக்குப்பதிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக முதல்வர் தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இல்லை என்றால் இப்பகுதி மக்களை திரட்டி மிக பெரிய போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

செய்தி : க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment