/indian-express-tamil/media/media_files/1jvp6IFCiMiCZt4I4ctC.jpg)
சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் உட்பட 7 காவலர்களை கூண்டோடு பணி இடமாற்றம் செய்து மயிலாடுதுறை எஸ்.பி மீனா அதிரடி உத்தரவு
சீர்காழியில் ஒரே நாளில் சகோதரர்களுக்கு 3 இடங்களில் அரிவால் வெட்டு தாக்குதல் சம்பவங்களில், மெத்தனமாக செயல்பட்டதாக, சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் உட்பட 7 காவலர்களை கூண்டோடு பணி இடமாற்றம் செய்து மயிலாடுதுறை எஸ்.பி மீனா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் சிகாரி தெற்கு வீதியில் ஜூன் 27-ம் தேதி, ஐயனார் கோயில் தெருவைச் சேர்ந்த மதன் என்பவர் மீது மர்மக் கும்பல், இரும்புக் கம்பி மற்றும் அரிவால் போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர்.
அதே போல, மதனின் சகோதர்கள் மணிகண்டன் மற்றும் சுரேஷை அதே நாளில் வெவ்வேறு இடங்களில் மர்மக் கும்பல் அரிவால் மற்றும் இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக, விக்னேஷ், பூரணச் சந்திரன், குற்றாலீஸ்வரன், வினோத்குமார் ஆகிய 4 பேர்களை ஜூன் 29-ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களைத் தேடி வந்த நிலையில், இதில் தொடர்புடைய ஐயனார் கோயில் தெருவைச் சேர்ந்த அருண், செந்தில் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, சீர்காழி காவல் நிலைய போலீசார் மெத்தனமாக செயல்பட்டதாக, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாலர் மீனா, சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 7 போலீசாரை பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதில் சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமாரை ஆயுதப் படைக்கும், உதவி ஆய்வாளர் அசோக்குமாரை குற்றாலம் காவல் நிலையத்துக்கும், உதவி காவல் ஆய்வாளர் சீனிவாசனை மாவட்டக் குற்றப் பிரிவுக்கும் பணி இட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சதீஷ்குமார், ராஜாதி, தலைமைக் காவலர் குலோத்துங்கன், காவலர் அகஸ்டின் ஆகியோரை மணல்மேடு காவல் நிலையத்துக்கும் பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சீர்காழியில் ஒரே நாளில் சகோதரர்களுக்கு 3 இடங்களில் அரிவால் வெட்டு தாக்குதல் சம்பவங்களில், மெத்தனமாக செயல்பட்டதாக, சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் உட்பட 7 காவலர்களை கூண்டோடு பணி இடமாற்றம் செய்து மயிலாடுதுறை எஸ்.பி மீனா அதிரடி உத்தரவு பிறப்பித்தது, மயிலாடுதுறை காவலர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.