தமிழகத்தில் பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா டெல்லியில் தமிழக சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை தமிழகத்திற்கு கொண்டு வர டெல்லி சாகேத் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்று தன்தைத்தானே கூறிக்கொள்ளும் அவர், தான் கடவுகள் கிருஷ்ணரின் அவதாரம் என்று கூறி அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாக முன்னாள் மாணவிகள் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ உட்பட 8 பிரிவுகளின்கீழ் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழங்கு பதிவு செய்த நிலையில், இந்த வழக்கு நேற்று சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில். சிவசங்கர் தரப்பில் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சிவசங்கர் பாபாவை நேரடியாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி குழு விரைந்த நிலையில்,அவர் மருத்துவமனையில் இருந்து தலைமறைவானார்.
இதனையடுத்து சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. டெல்லியில் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் வளைத்ததாகவும், இன்று மாலை அல்லது நாளை சென்னைக்கு அழைத்து வர உள்ளதாகவும், சென்னையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil