சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 4 பேர் குண்டர் தடுப்பச்சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி 11, 2025 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையார்பட்டி வே. கற்பகமூர்த்தி (37), காரைக்குடி அருகே சாக்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி 10, 2025 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கரூர் மாவட்டம் வெங்கன்மேடு பகுதியைச் சேர்ந்த பா. சிபு (எ) கவின் (20), தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி 26, 2025 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட காரைக்குடி வைரவபுரம் பகுதியைச் சேர்ந்த சி. பாண்டி (38), பள்ளத்தூர் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி 13, 2025 அன்று அரசு மதுபானக் கடையில் பொருட்களை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட அதே ஊரைச் சேர்ந்த ரா. ராஜேஷ்பாண்டி (24) ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்களின் வேண்டுகோளின் பேரில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் அடிப்படையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், 4 பேரும் குண்டர் தடுப்பச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், போலீஸார் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.