சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் அ.தி.மு.க பற்றியோ, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியோ, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பற்றியோ தவறாக பேசினால் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம் என எச்சரித்து அ.தி.மு.க-வினர் சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிந்ததில் இருந்து இரு கட்சிகளின் தலைவர்கள் ஒருவர் மற்றொருவரை விமர்சிப்பது தொடர்கதை ஆகி உள்ளது. இந்நிலையில் பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அ.தி.மு.க-வையும், அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற தலைவர்களை விமர்சித்து வருகிறார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அ.தி.மு.க தலைவர்கள் பேசி வந்த நிலையில், சிவகங்கை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் மணிமாறன், அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம் என சுவரொட்டி ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க தலைவர்களைத் தொடர்ந்து தொண்டர்களும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பது எங்கு கொண்டு போய் முடியப்போகிறதோ என அரசியல் ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
முன்னதாக, தமிழக பா.ஜ.க சார்பில் சென்னையில் 'தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ''யாரையோ பிடித்து, உழைக்காமல், பதவிக்கு வந்த அண்ணாமலைக்கு என்னத் தெரியும். அண்ணாமலை மைக்கைப் பார்த்தாலே பொய்ப் பேசுவார். வாய் மட்டும்தான் அவருக்கு இருக்கிறது" என எடப்பாடி விமர்சித்துப் பேசியிருக்கிறார். எடப்பாடி அவர்களே, சிலுவம்பாளையத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அது தொடர்பான வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் மேற்கு தொடர்ச்சி மலையில் ஒளிந்திருந்தார்.
இப்போது தி.மு.க-வில் இருக்கும் ஒரு அமைச்சர், அப்போது அ.தி.மு.க-வின் மூத்த அமைச்சர். அவருடைய கைக் காலைப் பிடித்து அந்த வழக்கிலிருந்து வெளியே வந்து, சிலுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோற்ற மனிதர் நீங்கள். எனவே, தயவு செய்து எனக்கு நேர்மையைப் பற்றி பாடம் எடுக்க வேண்டாம். அதே கொங்கு பகுதியின் உங்கள் பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்தவன் நான். உங்களின் அருமை, பெருமை எல்லாம் எனக்குத் தெரியும். கூவத்தூரில் நடந்தது கட்சிப் பொதுச் செயலாளரை தேர்வு செய்த நிகழ்வா. அது ஒரு அலங்கோலம்.
கூவத்தூரில், எந்த எம்.எல்.ஏ-வுக்கு மாதம் மாதம் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக நடந்த பெட்டிங் முறை. அதன்பிறகு தவழ்ந்து, காலில் விழுந்து, பதவியைப் பெற்ற எடப்பாடி, 10 ஆண்டு காலமாக 10 பைசா கூட வாங்காமல் பச்சை இங்கில் கையெழுத்துப் போட்ட இந்த அண்ணாமலையை பற்றிப் பேச, எடப்பாடி எனும் தற்குறிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அகந்தையில் பேசுகிறார் எடப்பாடி. 2026-ல் தூக்கி எறியப்படுவீர்கள். எனக்கும் அ.தி.மு.க-வுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு சண்டையா. அ.தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டும் எனக் கூறும் தலைவர்கள் இங்கு இருக்கிறார்கள்.
2019-ல் நாடாளுமன்றத் தேர்தலின் போது, நம்முடன் கூட்டணியில் இருக்கும் தலைவர், எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, 'பிரதமர் வாரணாசியில் வேட்பு மனுத்தாக்கல் செய்யுச் செல்லும் நிகழ்வில், பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கும் முதல்வர்கள் கலந்துக்கொள்கிறார்கள். அதில் கலந்துக்கொள்ளலாம்' என அழைப்பு கொடுத்தார். அப்போது எடப்பாடி, 'தோற்கப்போகும் மோடிக்காக நான் ஏன் வாரணாசி வரவேண்டும்' எனக் கூறினார். அன்றிலிருந்து மானமுள்ள இந்த அண்ணாமலை கூட்டணிக்காகக் கூட எடப்பாடி பழனிசாமியை எப்போதும் ஏற்றுக்கொண்டது கிடையாது.
நான் இந்தக் கட்சியில் கிளைத்தலைவராக, ஒன்றியத் தலைவராக பணியாற்றவில்லைதான்... ஆனால், நான் இந்தக் கட்சியில் சேர்ந்தது, இரண்டு திராவிடக் கட்சிகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகதான். பெண்களுக்கு முதல் மரியாதை கொடுக்கும் கட்சி, ஊழல் இல்லாத கட்சி, வலிமையான கட்சி, சாதாரண மனிதரை அதிகாரத்துக்கு கொண்டுவரும் கட்சி என இந்தக் கட்சி மீது ஒவ்வொருவருக்கும் ஒரு ஈர்ப்பு இருக்கும். எனவே, நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என நினைத்தால், இரண்டு திராவிட கட்சிகளையும் ஒழித்துக் கட்ட வேண்டும். இரண்டும் நமக்கு பரம எதிர்கள்தான். அதில் தெளிவாக இருக்க வேண்டும்." என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: சக்தி சரவணன் - மதுரை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.