சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கண்ணமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் அஜய் குமாரை, வகுப்பாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் இணைந்து பல்வேறு வகையில் மன அளவிலான தொல்லைகளை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
ஐந்தாம் வகுப்பு மாணவனாக இருக்கும் அஜய்குமார், தாயை இழந்து, சித்தியின் பராமரிப்பில் கல்வி பயின்று வந்துள்ளார். ஆனால், வகுப்பு ஆசிரியர் மணிமேகலை மாணவனை வகுப்பறையில் மற்றும் மாணவர்களோடு அமர வைக்காமல் தனிமையில் அமர வைத்ததும், தலைமை ஆசிரியர் அனுசுயா சாதியினை வைத்து அவமதித்ததும், மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தரைக்குறைவான முறையில் நடந்துக்கொண்டதும், பள்ளி வளாகத்தில் நுழையவிடாமல் தவறான வார்த்தைகளுடன் அவமதித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும் மாணவனை வேறு பள்ளிக்கு அனுப்ப வற்புறுத்தி, மாற்றுச்சான்றிதழ் பெற மாணவனின் தந்தையிடம் கையொப்பம் பெற்றதாகவும், மாற்றுச் சான்றிதழ் வாங்கவில்லை என்றால் போலீசில் புகார் கொடுத்து, சிறுவர் சீர்திருத்த நிலையம் அனுப்புவோம் என மிரட்டியதாகவும் மாணவரின் தந்தை முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்துள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டதில் அஜய்குமார் என்பவர் மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொண்டு தற்போது இடைக்காட்டூர் புனித இருதய நடுநிலைப்பள்ளியில் பயின்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட மாணவன் மீண்டும் கண்ணமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேர விருப்பப்பட்டால் இப்பள்ளியில் அவரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டு உள்ளார்.