சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கிராமம் உள்ளது. இங்கு அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில், இந்த கோயிலில் அஜித்குமார் என்ற இளைஞர் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா மற்றும் அவரது தாயார் அந்த கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது, அவர்களது காரை பார்க்கிங்-கில் விடுமாறு கூறி, காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்துள்ளனர். பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது, காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என்றும் காவல் நிலையத்தில் நிகிதா புகார் அளித்துள்ளார். அது மட்டுமல்லாமல், நிகிதா மற்றும் கோயில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அஜித் குமார் கடுமையாக லத்தியால் தாக்கி விசாரிக்கப்பட்டுள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் அஜித்குமார் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. காவலாளி அஜித் குமார் காவல்துறை விசாரணையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், அவரது உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டதில், அவரை கடும் சித்திரவதை செய்ததற்கான அடையாளங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரேத பரிசோதனை முடிவுகளின் முதற்கட்ட தகவலில், அஜித்குமார் உடலில் குறைந்தது 18 வெளிப்புற காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த காயங்கள், மண்டை ஓடு தொடங்கி, கை, முதுகு, கால்கள் என உடல் முழுவதும் இருந்துள்ளது. உட்புற உறுப்புகளிலும் பலவிதமான காயங்கள், ரத்தக்கசிவு போன்ற, மரணத்துக்கே காரணமாக இருக்கக்கூடிய பாதிப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது. சங்குப்பகுதியில் ஏற்பட்ட தீவிர காயம் உயிரிழப்புக்கு நேரடியான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கையில் தெரியவருவதாக கூறப்படுகிறது. மேலும், உளவியல் அடிப்படையில் ஏற்பட்ட அதிர்ச்சி, அழுத்தம் மற்றும் உட்புற ரத்தக்கசிவு போன்றவை கூட மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
வழக்கமாக, பிரேத பரிசோதனை 1 முதல் 2 மணி நேரம் மட்டுமே நடக்கும். ஆனால், அஜித்குமார் உடலின் பிரேத பரிசோதனை 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுள்ளது. இது அவரது உடலில் அசாதாரண அளவிலான தாக்கங்கள் மற்றும் காயங்கள் இருந்ததை உறுதி செய்கிறது. இந்த வகையான வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள், அஜித்குமார் விசாரணையின் போது போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என்ற புகாரை உறுதி செய்யும் வகையில் உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. இறந்த நபர் தீவிரவாதியா?, அவர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று கொல்லப்பட்டாரா?, சாதாரண வழக்கில், விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட அவரை கடுமையாக தாக்கியது ஏன்? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அஜித்குமார் மரணத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே காவல்துறையைச் சேர்ந்த 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அஜித்குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையினரின் விசாரணைக்கிடையில் உயிரிழந்த கோயில் காவலாளர் அஜித்குமார் சம்பவம் தொடர்பான வழக்கு, தமிழக தலைமை காவல்துறைதலைவர் (டிஜிபி) சங்கர் ஜிவால் அவர்களின் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வு துறையான சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மரண சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி, மேலதிக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.