/indian-express-tamil/media/media_files/2025/06/02/u7oAV4tnX6D5gOJxo9jL.jpeg)
Sivagangai
மானாமதுரை சிப்காட் பகுதியில் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி கடற்பாசி கழிவுகள் சட்டவிரோதமாக எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மானாமதுரை சிப்காட் பகுதியில் செயல்படும் கடற்பாசி நிறுவனத்திடமிருந்து கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பொறுப்பை ஒரு தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்திருந்தது. எனினும், அந்த நிறுவனம், எந்தவித அதிகாரப்பூர்வ அனுமதியும் பெறாமல், தனியார் இடத்தில் கழிவுகளை எரித்தது.
இதன் விளைவாக, பக்கத்திலுள்ள கிராமங்களில் புகை பரவி, கடும் துர்நாற்றத்துடன் மக்கள் மூச்சு விட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் கிராம மக்கள் வருவாய்த் துறையிடம் புகார் தெரிவித்தனர். புகாரை தொடர்ந்து, மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, அந்த இடத்தில் செயல்பட்டு வந்த மறுசுழற்சி ஆலையை உடனடியாக சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
கழிவுகளை பாதுகாப்பின்றி எரிப்பதால் பல்வேறு தீவிர நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதை அறியாமல், இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபட்ட குத்தகைதாரர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். "இப்படிப்பட்ட அலட்சியமான செயல்களால் எங்கள் மக்களின் உயிர் கேள்விக்குறியாகிறது. ஏற்கெனவே கடற்பாசி செயல்பாடுகளால் தினமும் மூக்கைப் பொத்திக்கொண்டு செல்லும் நிலைதான் உள்ளது. இது குறித்து பலமுறை பல அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை" என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
மேலும், இதுபோன்ற அனுமதியின்றி மக்களின் வாழ்வுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் ஆலைகள் மீது நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலுவாக வலியுறுத்துகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.