சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்யும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில், சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை ஒட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்யும் பணி சாலை அமைக்கும் பணி போன்ற பல்வேறு முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதனிடையே, மாவட்ட விளையாட்டு விடுதியில் சுமார் 60 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். அமைச்சர் வருகையை ஒட்டி அந்த மாணவர்களில் சுமார் 30 -க்கும் மேற்பட்டவர்களை ஒரே நாளில் விடுப்பு எடுக்க வைத்துள்ளனர்.
இன்று அரசு பள்ளிக்கு செல்ல வேண்டிய அந்த மாணவர்களை மாவட்ட விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்வது, கம்பி நடுவது போன்ற பல்வேறு பணிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் மேற்கொள்ள சொல்லியிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அதிர்ச்சியும் வேதனையும் அடையச் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
பள்ளிக்கு செல்லும் மாணவர்களை பணியில் அமர்த்த கூடாது என அரசு பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதை அதிகாரிகள் கருத்தில் கொள்ளாமல் மாணவர்களை இதுபோன்ற வேலை வாங்கும் சம்பவம் தொடர் கதையாகி வருவது வேதனைக்குரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
செய்தி: சக்தி சரவணன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“