/indian-express-tamil/media/media_files/2025/06/17/BSCh260pH6kFYuvv4JOE.jpg)
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட மல்லாக்கோட்டை தனியார் கல்குவாரிக்கு ரூ 91 கோடி அபராதம் விதித்து தேவகோட்டை சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மல்லாக்கோட்டையில் மேகா புளு மெட்டல் தனியார் கல் குவாரி இயங்கி வந்தது. இங்கு கடந்த மே மாதம் 20 ம் தேதி காலை 400 அடி ஆழ பள்ளத்தில் விதிகளை மீறி பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதற்கு துளையிடும் பணி நடந்தது. அப்போது அதிர்வில் பிடிமானம் தளர்ந்த பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் புலம் பெயர் தொழிலாளி உட்பட 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குவாரி உரிமையாளரின் தம்பி கமலதாசன், குவாரி பொறுப்பாளர் கலையரசன், மேற்பார்வையாளர் ராஜ்குமார் ஆகிய 3 பேரை மட்டுமே எஸ்.எஸ்.கோட்டை போலீஸார் கைது செய்த நிலையில்,
தற்போது வரை குவாரி உரிமையாளர் மேகவர்மனை இன்னும் போலீஸார் கைது செய்யவில்லை.
இதனிடையே பல்வேறு விதிமீறல்கள், பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் குவாரி நடத்தப்பட்டு ஆறு பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மேகவர்மன் பெற்ற கல் குவாரி உரிமத்தை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் உரிமம் காலாவதியான நிலையில், வேறொரு இடத்திற்கு வாங்கிய அனுமதியை வைத்து குவாரி 8 மாதமாக இயங்கியது, சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து உரிமம் காலாவதியான பிறகும் கல்குவாரி கடந்த எட்டு மாதங்களாக செயல்பட்டது குறித்து கண்காணிக்க தவறிய
கனிமவளத்துறை ஆர்ஐ வினோத்குமார், மல்லாக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் ஆகிய இருவரையும் தற்காலிக பணியிட நீக்கம் செய்தும் மற்றும் சிங்கம்புணரி வட்டாட்சியர் பரிமளாவை பணியிடை மாற்றம் செய்தும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் விதிகளை மீறி சட்ட விரோதமாக செயல்பட்டு கற்களை வெட்டி எடுத்ததற்காக ரூ 91 கோடி அபராதம் செலுத்த தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஸ் வெங்கட் வட்ஸ் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு நகலை மல்லாக் கோட்டையில் உள்ள மேகா புளுமெட்டல் கல்குவாரி உரிமையாளர் மேகவர்ணம் என்பவது வீட்டில் பணியாளர்கள் ஒட்டி உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.