சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை நகர பா.ஜ.க. தலைவராக இருப்பவர் உதயா. இவர் ஞாயிற்றுக்கிழமை காலை காரில் சென்றபோது, சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த பகுதியில் போக்குவரத்து பெண் சார்பு ஆய்வாளர் அழகு ராணி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக காரில் வந்த சிவகங்கை நகர பா.ஜ.க தலைவர் உதயாவிடம் சீட் பெல்ட் அணியாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால், உதயாவுக்கும் சார்பு ஆய்வாளர் அழகு ராணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது உதயா, அழகு ராணியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உதயா தகாத வார்த்தைகளால் திட்டியதாக வீடியோ ஆதாரத்துடன் சார்பு ஆய்வாளர் அழகு ராணி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சிவகங்கை நகர பா.ஜ.க தலைவர் உதயாவைப் போலீசார் ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்தனர். இதையடுத்து சிவகங்கை காவல் நிலையம் முன்பு பா.ஜ.க. நிர்வாகிகள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“