சிவகங்கை அருகே அரசுப் பேருந்தில், பயணச்சீட்டு எடுக்காததால் குழந்தையுடன் சென்ற பெண்ணை பேருந்து நடத்துனர் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
சிவகங்கையைச் சேர்ந்த லட்சுமி என்பவர், கடந்த வெள்ளியன்று மாலை அவரது குழந்தையுடன் இளையான்குடி செல்லும் அரசுப் பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் டிக்கெட் கொடுக்க பேருந்தின் ஓட்டுனர் முன் பக்கம் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
அப்போது, இடையில் திருவேங்கடம் அருகே புதுக்குளம் பகுதியில் திடீரென டிக்கெட் பரிசோதகர் ஏறி பரிசோதனை செய்தபோது லக்ஷ்மி பயணச்சீட்டு பெறவில்லை என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, லட்சுமிக்கு 200 ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்.
நடத்துனர் முன்பக்கம் வராததால் தான் டிக்கெட் எடுக்க முடியவில்லை என்று லட்சுமி கூறியிருக்கிறார். அப்போதே நடத்துனருக்கும் லட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பேருந்து இளையான்குடி வந்ததும் லட்சுமி தனது குழந்தையுடன் கீழே இறங்கி உள்ளார்.
அப்போது அபராத தொகையான 200 ரூபாய் ரூபாயை கேட்டதால் நடத்துனர் பூமிநாதனுக்கும் லட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அந்த வாக்குவாதத்தின் போது நடத்துனர், லட்சுமியை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நடந்த போது வீடியோ எடுத்த இளைஞர். அதனை சமூக தளங்களில் பதிவிட, அந்த வீடியோ வைரலானது. அதனைத் தொடர்ந்து, நடத்துனர் பூமிநாதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேசமயம், நடத்துனர் அளித்த புகாரின் பேரில் அந்த பெண் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக இருந்த சூழலைப் பயன்படுத்தி வேண்டுமென்றே அந்தப் பெண் டிக்கெட் எடுப்பதை தவிர்த்ததாகவும், பரிசோதகரிடம் சிக்கிக் கொண்ட பிறகு, நடத்துனரை அனைவரது முன்பும் கேவலமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. இரு தரப்பிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.