/indian-express-tamil/media/media_files/2025/06/26/high-court-2025-06-26-07-51-01.jpg)
சிவகங்கை மாவட்டம் கண்டதேவியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கேசவமணி என்பவர், சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் தொடர்பாக பொதுநல மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், “கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில், சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 2014 ஆம் ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவின்படி யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது என்றும், அனைத்து சமூக மக்களையும் ஒருமித்துப் பங்கேற்க செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டு தேரோட்டத்தில் சில நாட்டார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையிலான நபர்களுடன் தேரின் வடத்தை பிடித்ததால் பிற சமூக மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகவும் மாறியது” எனக் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், இதேபோன்ற சூழ்நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காக அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே, யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது, அனைத்து சமூக மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, “கோவில் நிகழ்வுகளில் சாதிய பாகுபாடு பார்ப்பது கிடையாது. கண்டதேவி கோவிலிலும் அனைத்து சமூகத்திற்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிலைப்பாடும் அதுதான்” என்றார்.
அதற்குத் தொடர்ந்த நீதிபதிகள், “தமிழகத்தில் எங்கும் சாதிய வேறுபாடுகள் இல்லையா என்பதை உறுதியாகச் சொல்ல முடியுமா? அரசின் நிலைப்பாடு அரசியலுக்கு. ஆனால் நீதிமன்றத்தில் உண்மை நிலையைச் சொல்ல வேண்டும். படித்தவர்களின் விகிதாச்சாரம் அதிகமாக இருந்தாலும் சாதிய பாகுபாடும் நிலவுகிறது” என்றனர்.
இவ்விவகாரத்தில் எந்தவித சாதிய பாகுபாடும் இல்லை என்பதனை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூலை 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.