/indian-express-tamil/media/media_files/2025/02/15/3nni1LWO5fZem5M7dALk.jpg)
காரைக்குடியில் காதலர் தின ஆஃபர்; எதிர்ப்பு தெரிவித்து வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கைது
காரைக்குடியில் காதலர் தின ஆஃபர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தாலி கயிறுடன் வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். உடல் நிலை கருத்தில் கொண்டு ஒருவர் காவல் நிலைய பினையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் தனியார் பேக்கரி நிறுவனத்தினர் காதலர் தின ஆஃபர் அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணி மாவட்ட பொதுசெயலாளர் அக்னி பாலா தலைமையில் பேக்கரி முன் தாலிக்கயிறுடன் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வடக்கு காவல்துறையினர் இந்து முன்னணி அமைப்பு சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். தொடர்ந்து காரைக்குடி வடக்கு காவல்துறையினர் காதலர் தின ஆஃபர் அறிவித்த பேக்கரி நிறுவனத்தாரிடம் புகாரை பெற்று இந்து முன்னனி மாவட்ட செயலாளர் அக்னி பாலா தேவகோட்டை நகரச் செயலாளர் சுரேஷ், மற்றொரு நிர்வாகி மாரியப்பன், காரைக்குடி நகர செயலாளர் கார்த்திகேயன் மற்றும் இளையராஜா ஆகிய 5 பேரை கைது செய்து அவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த தகவல் பரவியதைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வடக்கு காவல் நிலையம் முன்பு குவிந்ததையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட இந்து மக்கள் நல கட்சியை சேர்ந்த இளையராஜாவின் உடல்நிலை கருத்தில் கொண்டு அவருக்கு காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.
தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கைது செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் 4 பேரை தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலா உட்பட நான்கு பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகிகள் 4 பேரையும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.