சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் சிவகங்கை மாவட்ட எஸ்.பி-யாக இருந்த ஆஷிஸ்ராவத் இடமாற்றம் செய்யப்பட்டு, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இதேபோல், மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அஜித்குமார் காவல்துறையினரால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது மருத்துவ அறிக்கையில் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.
இதனிடையே, இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, சி.பி.ஐ, ஜூலை 12 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து, ஜூலை 14 ஆம் தேதி விசாரணையை தொடங்கியது. எஸ்.பி. ராஜ்பீர் மற்றும் டி.எஸ்.பி. மோஹித் குமார் தலைமையிலான சி.பி.ஐ அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
/indian-express-tamil/media/post_attachments/d728df1e-4d4.jpg)
சி.பி.ஐ, 15-வது நாளாக விசாரணையை அஜித் குமாரின் வீட்டில் இருந்து மீண்டும் ஆரம்பித்துள்ளது. அஜித் குமாரின் தம்பி நவீன் குமார் மற்றும் தாய் மாலதியை, ஏழு பேர் கொண்ட இரண்டு சி.பி.ஐ குழு நேரில் சென்று விசாரணை செய்தது. இதில் ஒரு குழுவினர், ஆதார் கார்டும், புகைப்படங்களும் தேவை எனக் கூறி, இருவரையும் காரில் ஏற்றி மதுரையிலுள்ள ஆத்திக்குளம் சி.பி.ஐ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/f773b404-86e.jpg)
மற்றொரு குழு, திருப்புவனம் காவல் நிலையத்திலும், அதன் பின்புற காவலர் குடியிருப்பிலும் விசாரணை மேற்கொண்டது. அங்கு வசித்துவரும் தலைமை காவலர் கண்ணன் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ அதிகாரிகள், அவர் வீட்டை பூட்டி இருந்ததால் திருப்பி வந்து, அரைமணி நேரத்திற்கு மேலாக காவல் நிலையத்திலும் விசாரணை மேற்கொண்டு பின்னர் புறப்பட்டுச் சென்றனர்.
இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அஜித் குமாரை விசாரித்தபோது வலிப்பு ஏற்பட்டதாகவும், அதனாலே உயிரிழந்ததாகவும் புகார் அளித்தவரே இந்த தலைமை காவலர் கண்ணன் என்பதும், அதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் தான்.