சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் சிவகங்கை மாவட்ட எஸ்.பி-யாக இருந்த ஆஷிஸ்ராவத் இடமாற்றம் செய்யப்பட்டு, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இதேபோல், மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அஜித்குமார் காவல்துறையினரால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது மருத்துவ அறிக்கையில் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.
இதனிடையே, இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, தற்போது இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 5 தனிப்படை காவலர்களை சி.பி.ஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது. இது தொடர்பான மனு இன்று மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 5 காவலர்களும் ஆஜராகி இருந்தனர்.
தனிப்படை காவலர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போரையும் இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ கோரியது. இந்த நிலையில், தனிப்படை காவலர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.