சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் சிவகங்கை மாவட்ட எஸ்.பி-யாக இருந்த ஆஷிஸ்ராவத் இடமாற்றம் செய்யப்பட்டு, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இதேபோல், மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அஜித்குமார் காவல்துறையினரால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது மருத்துவ அறிக்கையில் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.
இதனிடையே, இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, தற்போது இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் ஐந்தாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்புவனம் மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அஜித் குமார் மற்றும் அவரது சகோதரர் நவீன் குமார் உள்ளிட்ட நான்கு பேரை அழைத்து சென்று தாக்கிய இடங்களில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதேபோல், திருப்புவனம் காவல்நிலையம் மற்றும் உயிரிழந்த அஜித் குமார் வீடு உள்ளிட்ட பகுதிகளிலும் சி.பி.ஐ அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இன்று கூட சி.பி.ஐ விசாரணைக்கு 2வது முறையாக சாட்சிகள் ஆஜராகியுள்ளனர். தனிப்படை ஓட்டுநர் ராமச்சந்திரன், கோயில் ஊழியர் பிரவீன் குமார், அஜித்குமாரின் நண்பர் வினோத் குமார், ஆட்டோ ஓடுநர் அருண் குமார், அஜித்குமாரின் தம்பி நவீன் குமார் ஆகிய 5 பேரும் மதுரையில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்
இதற்கிடையில், அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, அஜித்குமார் கொலை வழக்கில் அவரது குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், உரிய பாதுகாப்பு கோரி சாட்சியங்கள் தொடுத்த வழக்கை 7 நாட்களுக்குள் விசாரிக்க மாவட்ட நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெறும் ரூ 7.50 லட்சம் இழப்பீடாக வழங்கியது போதாது என்றும், கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.