சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சி தமிழகத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளில் ஒன்றாகும். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது ஊராட்சி மன்ற தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
அதைத் தொடர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஊராட்சி துணைத் தலைவர் பாண்டியராஜன் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டு, கவுன்சிலர் நல்லம்மாள் செல்வராணி அவருக்கு துணையாக ஊராட்சி நிர்வாகத்தை கவனித்து வந்தார்.
இந்நிலையில் இவர்கள் ஊராட்சி நிதியைக் கையாடல் செய்வதாகவும், முறைகேடு செய்வதாகவும் புகார்கள் எழுந்ததையடுத்து நல்லம்மாள் செல்வராணி அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து 2021 ஆகஸ்ட் மாதம் முதல் தனி அலுவலர் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் ஊராட்சி நிர்வாகப் பணிகள் மற்றும் வரவு, செலவு கணக்குகளை கவனித்து வந்துள்ளனர்.
ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரை ஊராட்சியின் கணக்குகளைத் தணிக்கை செய்ததில் பல லட்சம் ரூபாய் பணத்திற்கு முறையான கணக்கு இல்லாமல் கையடால் செய்யப்பட்டுள்ளதாக தணிக்கை குழு அறிக்கை சமர்பித்தது. இதற்கிடையே ஆகஸ்ட 2021 முதல் தனி அலுவலர், பாண்டியராஜன், ஊராட்சி செயலர் ஆகியோர் தற்காலிக தூய்மை பணியாளர்களின் வங்கி கணக்குகளில் கையாடல் செய்த ஊராட்சி நிதி மற்றும் முறைகேடு செய்த பணத்தை வரவு வைத்து மோசடி செய்தது தெரியவந்தது.
ஊராட்சி நிதியில் கிட்டத்தட்ட ரூ. 1 கோடியே 36 லட்சத்து 53 ஆயிரம் தற்காலிக தூய்மை பணியாளர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தி அதை முறைகேடு செய்துஅவர்களது பெயரிலும் மற்றும் அவர்களின் உறவினர்களின் பெயர்களிலும் சொத்துகளை வாங்கியுள்ளனர்.
இந்நிலையில் சிவகங்கையைச் சேர்ந்த இராமநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஊராட்சி நிதியை கையாடல் செய்த துணைத் தலைவர் பாண்டியராஜன், ஊராட்சி செயலர் மற்றும் முன்னாள் தனி அலுவலர் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை ஆகஸ்ட் 24-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வு வழக்கு தொடர்பாக
சிவகங்கை ஆட்சியர் 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், ஊராட்சி செயலர் அண்ணாமலை நள்ளிரவில் ஆவணங்களை அழிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகாரின் பேரில் நள்ளிரவில் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil