சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள காஞ்சிரங்குளத்தில் முதியவரை கொடூரமாக கொலை செய்த இளைஞரை 30 நிமிடங்களில் போலீசார் கைது செய்தனர். தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள காஞ்சிரங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா (70). அவரது வீட்டின் அருகே வசிப்பவர் சக்தி கணேஷ் (18). இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்
இவர் மீது இரண்டிற்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கருப்பையாவிற்கும் சக்தி கணேஷ் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், கருப்பையாவை சக்தி கணேஷ் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மானாமதுரை டி.எஸ்.பி நிரேஷ் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதையடுத்து, கருப்பையாவின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக உடலை அனுப்பி வைத்தனர். மேலும், தப்பி ஓடிய இளைஞரையும் விரைவாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்