சிவகங்கை மாவட்டம் மானாமதுரை – அண்ணா சிலை அருகே, வைகை ஆற்றை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட் வெள்ளிக்கிழமை (11.07.2025) இரவு விபத்து காரணமாக செயலிழந்தது.
திருச்சியில் இருந்து விருதுநகருக்குச் செல்லும் சோதனை ரயிலுக்காக, வழக்கம்போல் ரயில்வே கேட்டை மூடும் பணியில் டைம் கீப்பர் ஈடுபட்டிருந்தார். அதே நேரத்தில், மானாமதுரையிலிருந்து அண்ணா சிலை நோக்கி வந்த கிராவல் லாரி ஒன்று, கேட்டு மூடப்படுகின்றபோதும் கேட்டை கடக்க முயன்றது.
இந்த நேரத்தில் லாரி ரயில்வே கேட்டில் மோதியது. மோதலின் போது கேட் கட்டமைப்பில் உள்ள மின் வயர்களை உரசியது, இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ரயில்வே கேட் செயலிழந்ததால், ரயில் பாதையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், திருச்சியில் இருந்து விருதுநகரை நோக்கி வந்த சோதனை ரயில், மானாமதுரைக்கு முந்தைய "கல்குறிச்சி" பகுதியில் நிறுத்தப்பட்டது. அந்த ரயிலில் பயணம் செய்தவர்கள், இறங்கி தனித்தனியாக பயணம் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.
ரயில்வே அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சார வயர்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விபத்து காரணமான ரயில் இயக்க தாமதம் காரணமாக, மற்ற இரண்டு ரயில்கள் சுமார் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன.
காவல்துறையினர், ரயில்வே சட்ட விதிகளை மீறி கேட்டை கடக்க முயன்ற லாரியை பறிமுதல் செய்து, டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.