சிவகங்கை மாவட்டம், சிவகங்கை சார் பதிவாளர் அலுவலகம் எண் 1 ல் பணிபுரியும் சார்பதிவாளர் ஈஸ்வரன். இவரிடம் காளையார் கோவில் அருகே உள்ள கோளாந்தி என்ற கிராமத்தை சேர்ந்த அற்புதம் என்பவர் ஐந்து லட்சம் மதிப்பிலான சொத்தில் பத்திர பிழை திருத்தம் செய்ய வந்துள்ளார்.
அப்போது, சார் பதிவாளர் ஈஸ்வரன் பத்திர பதிவு அலுவலகத்தில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கணக்கிட்டு ரூபாய் 18 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த பணத்தை புரோக்கர் கண்ணன் என்பவரிடம் கொடுக்குமாறு சார்பதிவாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, 20 நாட்களாக அலைந்து திரிந்த அற்புதம் இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறை கண்காணிப்பாளர் ஜான் பீட்டர் தலைமையிலான அதிகாரிகள் இன்று புரோக்கர் கண்ணன் அற்புதம் என்பவரிடமிருந்து லஞ்ச பணத்தை பெறுகையில் கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும், புரோக்கர் கண்ணன் மற்றும் சார் பதிவாளர் ஈஸ்வரன் இருவரையும் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை நகரில் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளர் லஞ்சம் பெறுகையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் முறையாக இந்த கைது நடவடிக்கையை செய்துள்ளனர். சார் பதிவாளர் மற்றும் பத்திர புரோக்கர் கைது செய்யப்பட்ட சம்பவம் மற்ற பத்திர புரோக்கர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது .
செய்தி: சக்தி சரவணன் - மதுரை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“