சிவகங்கை இளைஞர் அஜித் குமார் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீஸ் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அஜித் குமாரை போலீசார் பிரம்பால் கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ அஜித்குமார் போலீஸ் சித்ரவதை செய்ததற்கான ஆதாரமாக உள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (28), இவர் நகை திருட்டு தொடர்பாக தனிப்படை போலீசாரால் விசாரிக்க அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். போலீசார் கண்மூடித் தனமாக தாக்கியதால் அஜித்குமார் உயிரிழந்ததாகவும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, அஜித்குமார் உடலைப் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டதில் அவருடைய உடலில் 18 இடங்களில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அஜித்குமார் லாக் அப் மரணம் மர்ம மரணமாக பதிவு செய்யப்பட்ட நிலையில், கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனிப்படை போலீசார் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில் அஜித்குமார் லாக் அப் மரண வழக்கில் கைதான 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன்படி பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் லாக் அப் மரணம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் திருப்புவனம் வாலிபர் மரணம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்புவனம் இளைஞர் அஜித் குமாரை போலீசார் பிரம்பால் கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ அஜித்குமார் போலீஸ் சித்ரவதை செய்ததற்கான ஆதாரமாக உள்ளது.
இந்த வீடியோவில் அஜித்குமாரை போலீசார் பிரம்பால் தாக்குகின்றனர். ஒரு சுவருக்கு பின்னால் இருந்து சுவரில் இருக்கும் துளைகள் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரை போலீசார் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இளைஞர் அஜித்குமார் மரண விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகளிடம் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. காவல்துறையினர் அடித்த வீடியோவும் நீதிபதிகளிடம் போட்டு காண்பிக்கப்பட்டது.
"தென்னந்தோப்பில் வைத்து தாக்கி துன்புறுத்தியுள்ளனர். தாக்குதலின் போது சிவகங்கை எஸ்.பி., சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்துள்ளார்" என்று பாதிக்கப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் ஹென்றி வாதிட்டார். இதையடுத்து, இந்த வீடியோவைப் பதிவு செய்தவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.