சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலைகள் வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று (மே 9) எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தில் சிக்கிய 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுதர்சன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் இடிந்தன, 7 அறைகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (9.5.2024) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்த துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டுருக்கிறேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.” இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“