சிவகாசி அருகேயுள்ள சின்ன காமன்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்றில் இன்று காலை திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், வெடி விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தை சுற்றிலும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், வெடி விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட தகவலின்படி, இந்த பயங்கர பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சிலர் காயமடைந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்தும், பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் இருந்தனவா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். முழுமையான விசாரணைக்குப் பின்னரே விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும். இந்த சம்பவத்தால் சின்ன காமன்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.