Arun Janardhanan
Sivakasi fireworks makers : தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கின்ற நிலையில் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் மத்திய அரசு அங்கீகாரம் அளிக்கும் ‘கெமிக்கல் ஃபார்முலாக்கள்’ கொண்டு தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பால் சிவகாசியில் சற்று மந்த நிலை நிலவி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பில் போதிய தெளிவற்ற தன்மை மற்றும் குழப்பங்கள் நிலவி வருவதாகவும், பசுமை பட்டாசுகளுக்கான ஃபார்முலாக்களை தர அரசு ஏஜென்சிகள் விரைந்து செயல்படுவதில்லை என்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் புகார்களை முன்வைக்கின்றன.
To read this article in English
மேலும் சி.எஸ்.ஐ.ஆர் – என்.ஈ.ஈ.ஆர்.ஐ (National Environmental Engineering Research Institute) குறிப்பிட்ட சில ஃபார்முலாக்களை பெசோ (Petroleum and Explosives Safety Organisation (PESO)) அமைப்பு மறுத்துவிட்டது என்றும் அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். பெயர் தெரிவிக்க விரும்பாத உற்பத்தியாளர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு பேட்டி அளிக்கும் போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, எப்போதும் பட்டாசு தயாரிக்கப்படும் பட்டாசுகளைப் போல் தற்போதும் பட்டாசுகளை தயாரித்து வருகிறோம் என்று கூறினார்.
Sivakasi fireworks makers
சி.எஸ்.ஐ.ஆர் – என்.ஈ.ஈ.ஆ.ஐ இயக்குநர் ராகேஷ் குமார் ”இதுவரை பசுமை பட்டாசுகள் தயாரிக்க முன் வந்த எந்த ஒரு உற்பத்தியாளர்களின் விண்ணப்ப மனுக்களையும் நிராகரிக்கவில்லை. இது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது” என்று கூறியுள்ளார். சில உற்பத்தியாளர்கள் இந்த ஆண்டு தங்களின் உற்பத்திகளை நிறுத்தியுள்ளனர். டெல்லி மற்றும் தலைநகரின் இதர பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பதற்கும் பயன்பாட்டிற்கும் கடுமையாக நிலவும் விதிமுறைகள் காரணமாக இந்த நிலைக்கு அவர்கள் வந்துள்ளனர். ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பசுமை பட்டாசு பயன்பாடு என்பது வெறும் எழுத்தளவில் மட்டுமே உள்ளது.
பசுமை பட்டாசுகள் குறித்த தீர்ப்பை தீபாவளி முடிந்து ஒருவாரம் கழித்து தான் அறிவிக்க உள்ளது உச்ச நீதிமன்றம்.இந்தியாவில் பயன்படுத்தப்படும் 80% பட்டாசுகள் சிவகாசியில் இருந்து உருவாக்கப்படுபவை. கடந்த ஆண்டு மட்டும் ரூ. 4000 கோடிக்கு விற்பனை புரிந்து சாதனை புரிந்துள்ளது. இந்த மாத துவக்கத்தில் சி.எஸ்.ஐ.ஆர் – என்.ஈ.ஈ.ஆர்.ஐ பரிந்துரை செய்த ஃபார்முலாவைக் கொண்டு பட்டாசுகளை உருவாக்க முயற்சி செய்ததில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.
”உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் 1070 உரிமம் பெற்ற நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் 3 லட்சம் பணியாட்கள் பாதிப்படைந்துள்ளனர். கடந்த ஆண்டு அறிவிப்பிற்கு பிறகு பசுமை பட்டாசுகளுக்கான ஃபார்முலா பெற காத்திருந்தோம். கிட்டத்தட்ட அனைத்து தொழிற்சாலைகளும் 5 மாதத்திற்கும் மேலாக மூடப்பட்ட நிலையில்; இருந்தது. ஆனால் சி.எஸ்.ஐ.ஆர் அமைப்பு சில குறிப்பிட்ட பட்டாசுகளுக்கான ஃபார்முலாவை மட்டுமே அறிவித்துள்ளது” என்று கலிராஜன் மாரியப்பன் அறிவித்தார். அவர் ஸ்ரீ ஆறுமுகம் பட்டாசு நிறுவனம் வைத்து நடத்துகிறார். தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தில் அவர் ஒரு உறுப்பினர்.
கிட்டத்தட்ட 1700 உற்பத்தியாளர்கள் பசுமை பட்டாசுகள் தயாரிப்புக்கான ஃபார்முலாவை கேட்க வெறும் 28 நிறுவனங்களுக்கு மட்டுமே அவை வழங்கப்பட்டுள்ளது. அதில் மூன்று மட்டுமே சிவகாசியில் இயங்கி வருகிறது. இது போன்ற சூழலால் இங்கு பலரும், பழைய முறையில் பட்டாசுகளை உற்பத்தி செய்ய துவங்கியுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான பெட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் பசுமை பட்டாசுகள் பெசோவின் தரச்சான்றிதழுக்காக காத்திருக்கிறது.
பெசோவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் “ பேரியம் நைட்ரேட்டின் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்ததால் சி.எஸ்.ஐ.ஆர் – என்.ஈ.ஈ.ஆர்.ஐ அமைப்பு பல்வேறு ஃபார்முலாக்களை நிராகரித்தது. சிங்கிள் – சவுண்ட் க்ராக்கர்களுக்கு மட்டுமே இதுவரை அனுமதி வழங்கியுள்ளது பெசோ” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த புகார்கள் குறித்து ராகேஷிடம் கேட்ட போது “பெசோ, உற்பத்தியாளர்களின் விண்ணப்பங்களை நிராகரித்தால் அதனை எங்கள் பார்வைக்கு கொண்டு வரவேண்டும். எங்களின் ஃபார்முலாக்களும் நிராகரிக்கப்பட்டது என்றால் அதற்கான விளக்கங்களை நாங்கள் அளிக்கின்றோம். பேரியம் குறித்து கேட்ட போது “நாங்கள் இரண்டு விதமான கேட்டகிரியில் பணியாற்றி உள்ளோம். ஒன்று முற்றிலும் புதுமையானது. அதில் நாங்கள் முடிந்த வரை பேரியம் நைட்ரேட் பயன்பாட்டை தவிர்த்துள்ளோம். மற்றொன்றில் பேரியம் பயன்படுத்தி “பசுமை பட்டாசுகள்” என்ற நிபந்தனங்களை எட்டும் வகையில் குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தும் பட்டாசுகளை உருவாக்கியுள்ளோம்.
உச்ச நீதிமன்றம் முடிவான தீர்ப்பினை இன்னும் வழங்காத காரணத்தால் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார். 24 முதல் 25 ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாக பணி புரிந்து பசுமை பட்டாசுகளை உருவாக்கியுள்ளனர். உற்பத்தியாளர்களுக்கு ஃபார்முலாக்களை தருவதற்கு முன்பு சோதனைக்கு உட்படுத்தி எமிசன் டெஸ்ட்களை க்ளியர் செய்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.