/indian-express-tamil/media/media_files/2025/04/26/xdIXSEitIDREYlmx3GeG.jpg)
சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 பெண்கள் பலி; 4 பேர் படுகாயம்
சிவகாசி அருகே நெடுங்குளத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். ஜெய்சங்கர் என்பவருக்குச் சொந்தமான இந்த பட்டாசு ஆலையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இங்கு சுமார் 200 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏப்.26ல் பட்டாசு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தபோது, பேன்சி ரக பட்டாசுக்கு ரசாயன கலவை செலுத்தும்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரு அறையில் ஏற்பட்ட வெடி விபத்து அடுத்தடுத்து அறைகளுக்கும் பரவித் தொடங்கியதால் தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். விபத்தில் சம்பவ இடத்திலே கலைச்செல்வி (35), மாகியம்மாள் (38), திருவாய்மொழி (40) ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் எம். புதுப்பட்டியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி, லட்சுமி மற்றும் கோபாலவப்பட்டி கூமாபட்டி ராமசுப்பு ஆகிய 4 பேர் படுகாயமடைந்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் லேசான காயமடைந்த 3 பேர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை, காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர் ஜெய்சங்கர், போர்மேன் சுப்புராஜ், மேலாளர் ராஜேஷ் ஆகிய 3 பேர் மீது எம். புதுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் ஜெய்சங்கரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.