மதுரையில் வைகோ நடைபயணத்தில் தீக்குளித்த ரவி குறித்து புதிய தகவல்கள் வெளிவந்தன. வைகோவின் உரைகள் அடங்கிய நூலை வெளியிட்டவர் அவர்!
மதுரையில் இன்று வைகோ தொடங்கிய நடைபயணத்தில் மதிமுக பிரமுகர் ரவி தீக்குளித்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதுரையில் இருந்து கம்பம் வரை 10 நாட்கள் நடை பயணத்திற்கு வைகோ திட்டமிட்டார். இந்த நடை பயணத்தை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் சர்வ கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். சர்வ கட்சித் தலைவர்கள் கிளம்பிய பிறகுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
மதுரை பழங்காநத்தம் பகுதியில்தான் நடைபயண தொடக்க நிகழ்ச்சிக்கான மேடை போடப்பட்டிருந்தது. மதுரை மற்றும் சுற்று மாவட்டங்களை சேர்ந்த மதிமுக தொண்டர்கள் திரளாக இதில் கலந்து கொண்டனர். அவர்களில் விருதுநகர் மாவட்ட மதிமுக இளைஞரணி துணை செயலாளர் ரவியும் ஒருவர். ரவி திடீரென தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
ரவியின் தீக்குளிப்பு, வைகோவை வேதனைப்பட வைத்தது. நடைபயண தொடக்க நிகழ்ச்சி மேடையிலேயே கண்ணீர் வடித்து பேசினார் வைகோ. தீக்குளித்த ரவியை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும் வைகோ உத்தரவிட்டார்.
தீக்குளித்த ரவி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர்! அங்கு சொந்தமாக பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் வைகோ படத்துடன் காலண்டர் அச்சடித்து கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் மாநிலம் முழுவதும் மதிமுக நிர்வாகிகளுக்கு அதிக அறிமுகம் ஆனவர் இந்த ரவி!
வைகோவின் உரைகளையும் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் மதிமுக இன்னும் ஓரளவு செல்வாக்குடன் இருக்கும் விருதுநகர் மாவட்டத்தில் இளைஞரணி பதவியில் துடிப்பானவராகவே இயங்கி வந்திருக்கிறார் ரவி. சமூக வலைதளங்களிலும் வைகோவின் அறிக்கைகள், நிகழ்ச்சிகளை விடாமம் பகிர்ந்து வந்திருக்கிறார்.
கடைசியாக நேற்று இரவு 10 மணியளவில் தனது முகநூல் பக்கத்தில் சிவப்பு நிற பின்னணியில், ஆங்கிலத்தில் ‘Yes' என எழுதியிருக்கிறார். அதற்கான விளக்கம் எதையும் அவர் குறிப்பிடவில்லை. ஆனாலும் அதுதான் அவர் தீக்குளிக்க முடிவு செய்த தருணம் என மதிமுக.வினர் யூகிக்கின்றனர்.
ஆன்மீகத்திலும் நாட்டம் உடைய ரவி தனது பெயரை, ‘ஸ்ரீ சிவகாசி ரவிஜி’ என குறிப்பிட்டு வந்திருக்கிறார். அவரது இந்த தீக்குளிப்பை கட்சி நிர்வாகிகள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.