இந்தியாவின் பட்டாசுத் தலைநகரம் என்று அழைக்கப்படும் சிவகாசி, இந்தியாவின் 90% பட்டாசு தேவையை பூர்த்தி செய்து வருகிறது. சுமார் 1100 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வரும் இங்கு, 4 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இவர்களின் உழைப்பில்தான் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டுகின்றன. ஆனால், கடந்த சில மாதங்களாக விருதுநகர் மாவட்டத்தில் தொடரும் வெடிவிபத்துகள், இத்தொழிலையும், தொழிலாளர்களின் வாழ்வையும் அச்சுறுத்தி வருகின்றன.
நடப்பு 2025 ஆம் ஆண்டில், கடந்த 7 மாதங்களில் மட்டும் 14 வெடி விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், 26 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வெடிவிபத்துகளின் தொடர்ச்சியால் கொதித்தெழுந்த தேசிய பசுமை தீர்ப்பாயம், இனி ஒரு வெடிவிபத்துகூட நிகழக்கூடாது என மிகத் தீவிரமாக உத்தரவிட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆய்வில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், ஆலைகளை மூடுவது குறித்து அதிகாரிகள் முடிவு எடுக்கலாம் என்றும் பசுமை தீர்ப்பாயம் அறிவித்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு செய்ய 15 சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக் குழுக்கள் இன்று முதல் தங்கள் பணியைத் தொடங்கியுள்ளன.
ஆய்வு அச்சத்தில் மூடிய ஆலைகள்: வேலை இழந்த தொழிலாளர்கள்
ஆய்வில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்ற அஞ்சத்தால், சிவகாசி, வெம்பக்கோட்டை, எம்.புதுப்பட்டி, நாரணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை அவற்றின் உரிமையாளர்கள் தாங்களாகவே மூடியுள்ளனர்.
ஆய்வில் விதிமீறல் இருந்தால் உடனடியாக உரிமம் ரத்து செய்யும் நடவடிக்கை பாயும் என்பதால் பட்டாசு ஆலைகளை மூடி உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.