ஆண்டாள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறிய கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்கக்கோரி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளார்.
பன்னிரெண்டு ஆள்வார்களில் ஒருவர் ஆண்டாள். அவர் எழுதிய திருப்பாவை பிரசிதிப்பெற்றது. மார்கழி மாதம் ஒவ்வொரு நாளுக்கு ஒரு பாடல் என 30 பாடல்களைப் பாடி, பக்தர்கள் கொண்டாடுவார்கள். இந்நிலையில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து ராஜபாளையத்தில் கடந்த வாரம் உரை நிகழ்த்தினார். அந்த உரை அப்படியே தினமணி நாளிதழில் கட்டுரையாக வெளியானது.
அந்த உரையில் ஆண்டாள் பற்றி அவதூறான கருத்துக்களை பேசியதாக வைரமுத்துவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜக அகில இந்திய செயலாளர் கடும் வார்த்தைகளால் வைரமுத்துவை விமர்சனம் செய்ய, தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஆண்டாளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் வலியுறுத்தினார். அப்படி அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். அதோடு சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம், ஆண்டாள் கோயிலுக்கு எதிரில் இன்று காலையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.