தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று (மார்ச் 27) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 3.06 கோடி, பெண் வாக்காளர்கள் 3.17 கோடி, 8,465 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர். தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 68,144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தேர்தலை ஒட்டி புதிதாக 177 காவல் நிலையங்கள் அமைக்கப்படும். இதுவரை 33.31 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.33 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் 165 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணிக்காக 7 லட்சம் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சி-விஜில் செயலி மூலம் அளிக்கப்படும் புகார்களுக்கு 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“