சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் வழியாக ஆவடி வரை 16.07 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் நீட்டிப்பதற்கான திட்டமும் தொடக்கப்பபட்டுள்ளது.
அதன்படி 15 ரயில் நிலையங்களுடன் கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) தயாரிக்க 6 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
முழு திட்டத்திற்கான கட்டுமானச் செலவு ரூ.6,376.18 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆர்.வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் அண்ட் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஏ.இ.காம் இந்தியா பிரைவேட் லிமிடெட், பாலாஜி ரெயில்ரோட் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட், ரைட்ஸ் லிமிடெட், சிஸ்ட்ரா எம்.வி.ஏ கன்சல்டிங் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் மற்றும் அர்பன் மாஸ் டிரான்ஸிட் கம்பெனி லிமிடெட் ஆகிய 6 நிறுவனங்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க விண்ணப்பித்துள்ளன. டி.பி.ஆர் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் 180 நாள் காலக்கெடுவைக் கொண்டுள்ளது.
சி.எம்.ஆர்.எல் அதிகாரிகள் கூறுகையில், “ஏலத்தின் தொழில்நுட்ப மதிப்பீடு செய்யப்படும். தொழில்நுட்ப ரீதியாக தகுதி பெற்ற ஏலதாரர்களின் நிதி ஏலங்கள் திறக்கப்படுவதற்கு இரண்டு மாதங்கள் ஆகலாம். குறைந்த விலைக்கு ஏலம் கேட்பவருக்கு ஒப்பந்தம் வழங்கப்படலாம்'' எனத் தெரிவித்தனர். சி.எம்.ஆர்.எல் செப்டம்பர் 2023-ல், திட்டம் குறித்தான அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்தது.
பாடி புதுநகர், பார்க் ரோடு, கோல்டன் ஃப்ளாட்ஸ், வாவின், அம்பத்தூர் எஸ்டேட் பஸ் ஸ்டாண்ட், அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், டன்லப், அம்பத்தூர் ரயில் நிலையம், அம்பத்தூர் ஓடி பஸ் ஸ்டாண்ட், ஸ்டெட்ஃபோர்ட் மருத்துவமனை, திருமுல்லைவாயல், வைஷ்ணவி நகர், முருகப்பா பாலிடெக்னிக், ஆவடி உள்ளிட்ட 15 ஸ்டேஷன்களை உள்ளடக்கி மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. திட்ட அறிக்கை தயரிக்கும் போது திருநின்றவூருக்கு முன்பாக உள்ள பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் சி.எம்.ஆர்.எல் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“